13 கிராம மக்கள் நாளை முதல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து போராட்டம் அறிவிப்பு
- குழந்தைகளை அரசு பள்ளிகூடத்திற்கு அனுப்பாமல் காலவரையற்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்து உள்ளனர்.
- ஏகனாபுரம் பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 111 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. புதிய விமான நிலையத்துக்கு எதிராகவும், விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தும் கிராமமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக புதிய விமான நிலைய அறிவிப்பு வந்த நாள் முதல் போராட்டம் நீடித்து வருகிறது. மேலும் இது தொடர்பாக கிராமசபை கூட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
இந்நிலையில் பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்தும் அரசாணையை கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு வெளியிட்டது. இதனால் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 13 கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
இதற்கிடையே ஏகனாபுரத்தை மையமாக வைத்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் பரந்தூர் உள்ளிட்ட 13 கிராம மக்கள் புதிய போராட்டத்தை அறிவித்து உள்ளனர்.
பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு நிலம் எடுக்க போடப்பட்ட அரசாணையை திரும்ப பெறும்வரை நாளை (1-ந்தேதி)முதல் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகூடத்திற்கு அனுப்பாமல் காலவரையற்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்து உள்ளனர்.
ஏகனாபுரம் பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 111 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் பள்ளிக்கு செல்வதில்லை என்று தெரிவித்து உள்ளனர்.
இதேபோல் விமான நிலையம் நில எடுப்பில் அதிகம் பாதிக்கப்படும் கிராமங்களான நாகப்பட்டு நெல்வாய், மேலேறி கிராமத்தைச் சேர்ந்தவர்களும் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர். இதனால் பரந்தூர் மற்றும் ஏகனாபுரம் பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.