மறுகாலில் ஏற்பட்ட அடைப்பால் விளைநிலங்களுக்குள் புகுந்த நீர்- 150 ஏக்கர் பரப்பளவிலான நெல், வாழைகள் மூழ்கி நாசம்
- குப்பை, கூளங்களும் நிரம்பி காணப்படுவதால் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது.
- பயிர்கள் நாசமானதால் விவசாயிகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள படலையார்குளத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள 300 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
நாங்குநேரியான் கால்வாயில் இருந்து படலையார்குளத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. குளம் நிரம்பி உபரிநீர் வெளியேறும் மறுகால் போதிய பராமரிப்பின்றி காணப்படுகிறது.
இதனைதொடர்ந்து மறுகால் புதர் மண்டி கிடக்கிறது. குப்பை, கூளங்களும் நிரம்பி காணப்படுவதால் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மறுகாலை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் களக்காடு பகுதியில் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையினால் படலையார்குளம் நிரம்பியது. குளத்தின் மறுகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் உபரிநீர் வெளியேற வழியின்றி அருகில் உள்ள வட்டமொழி பத்து, மாணிக்கம்குளம் பத்து, மாவநேரி பத்து விளைநிலங்களுக்குள் குளத்து நீர் புகுந்தது.
இதனால் அங்கு பயிரிடப்பட்டுள்ள நெல், வாழைகள் நீரில் மூழ்கியது. 150 ஏக்கர் பரப்பளவிலான நெல், வாழைகள் தண்ணீரில் மூழ்கி நாசமாகியுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். பயிர்கள் நாசமானதால் விவசாயிகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே படலையார்குளத்தின் மறுகாலை போர்க்கால அடிப்படையில் தூர்வாரவும், தண்ணீர் வெளியேறவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.