குமரியில் இருந்து கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 150 கிலோ கஞ்சா பறிமுதல்
- போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள் துரத்தி சென்று 2 பேரையும் மடக்கி பிடித்தனர்.
- காரில் கஞ்சா கடத்தி வந்தது தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சமீர்கான் மற்றும் கொல்லத்தை சேர்ந்த நிவாப் என்பது தெரியவந்தது.
அருமனை:
சமீபகாலமாக தமிழக கேரள எல்லையில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக தகவல் வந்தது. இதையடுத்து அதனை கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா கடத்தப்படுகிறதா என்பது குறித்து போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் குமரியில் இருந்து கேரளா நோக்கி சென்ற ஒரு கார் கேரளா எல்லையில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் சைகை காட்டியும் நிற்காமல் சென்றது. இதனால் அந்த காரை கேரளா போலீசார் துரத்தி சென்றனர். அப்போது கேரளா வெள்ளறடை தெக்கன்குருசுமலை பகுதியில் காரை நிறுத்தி விட்டு காரில் இருந்த 2 மர்ம நபர்கள் தப்பி சென்றனர். அவர்களை போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள் துரத்தி சென்று 2 பேரையும் மடக்கி பிடித்தனர்.
பின்னர் போலீசார் மர்மநபர்கள் 2 பேரையும் அவர்கள் விட்டு சென்ற கார் அருகே அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் காரை சோதனை செய்தனர். அதில் சிறு சிறு மூட்டைகளாக சுமார் 150 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. மேலும் காரில் கஞ்சா கடத்தி வந்தது தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சமீர்கான் மற்றும் கொல்லத்தை சேர்ந்த நிவாப் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இருவரும் எங்கிருந்து கஞ்சா கடத்தி வந்தார்கள், இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.