தமிழ்நாடு

வார இறுதி, முகூர்த்த நாட்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1,550 சிறப்பு பஸ்கள் இயக்கம்

Published On 2024-03-22 05:32 GMT   |   Update On 2024-03-22 05:32 GMT
  • பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 570 சிறப்பு பஸ்கள் 24-ந் தேதி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • இந்த வார இறுதியில் இன்று 9,523 பயணிகளும், நாளை 6,187 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை 7,701 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர்.

சென்னை:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மற்றும் இதர இடங்களில் இருந்தும் தமிழகம் முழுவதும், இன்று (வெள்ளிக்கிழமை) நாளை (சனிக்கிழமை) மற்றும் 24-ந் தேதி (ஞாயிறு பவுர்ணமி, முகூர்த்தம்) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 305 பஸ்களும், நாளை 390 பஸ்களும் மற்றும் சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 65 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோன்று பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 570 சிறப்பு பஸ்கள் 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர, அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட மற்றும் குளிர்சாதனமில்லா 20 பஸ்கள் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை மற்றும் 24-ந் தேதிகளில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த வார இறுதியில் இன்று 9,523 பயணிகளும், நாளை 6,187 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை 7,701 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் செல்போன் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News