ரூ.3½ லட்சத்துக்கு வாடகைக்கு எடுத்து ஊட்டி மலை ரெயிலில் பயணித்த 16 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
- நீலகிரி மலை ரெயிலை லாபகரமாக இயக்கும் நோக்கத்துடன் தனி நபா்கள் ரெயிலை வாடகைக்கு எடுத்து பயணம் செய்ய தெற்கு ரெயில்வே அனுமதி அளித்து வருகிறது.
- வெளிநாடுகளை சோ்ந்த சுற்றுலா பயணிகள் நீலகிரி மலை ரெயிலை வாடகைக்கு எடுத்து பயணிப்பதில் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூருக்கு, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த மலை ரெயில் அடர்ந்த வனத்திற்கு நடுவே செல்வதாலும், அப்படி செல்லும்போது இயற்கை காட்சிகள் மற்றும் வனவிலங்குகளை பார்க்க முடியும்.
இதன் காரணமாக இந்த ரெயிலில் பயணிக்க உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இதனால் ஊட்டி மலை ரெயிலில் எப்போது கூட்டம் காணப்படும்.
சில நேரங்களில் நீலகிரி மலை ரெயிலை லாபகரமாக இயக்கும் நோக்கத்துடன் தனி நபா்கள் ரெயிலை வாடகைக்கு எடுத்து பயணம் செய்யவும் தெற்கு ரெயில்வே அனுமதி அளித்து வருகிறது.
இதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அவ்வப்போது மலை ரெயிலை வாடகைக்கு எடுத்து பயணிப்பதில் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா். குறிப்பாக இங்கிலாந்து, ரஷியா, அா்ஜென்டினா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளை சோ்ந்த சுற்றுலா பயணிகள் கடந்த காலங்களில் மலை ரெயிலை வாடகைக்கு எடுத்து பயணித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இங்கிலாந்தை சோ்ந்த 16 சுற்றுலா பயணிகள் ரூ.3 லட்சத்து 60 ஆயிரத்து 675 வாடகை செலுத்தி மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு மலை ரெயிலில் பயணம் மேற்கொண்டனா். அவர்கள் வனத்தில் உள்ள இயற்கை காட்சிகள், நிரூற்றுகள், வனவிலங்குகளை கண்டு ரசித்தபடி ரெயிலில் பயணித்தனர்.
இதுகுறித்து ரெயில்வே துறையினா் கூறுகையில், வெளிநாடுகளை சோ்ந்த சுற்றுலா பயணிகள் நீலகிரி மலை ரெயிலை வாடகைக்கு எடுத்து பயணிப்பதில் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா். இதனால் இந்த நீராவி ரெயிலின் பெருமை உலக அளவில் தெரிய வரும்.
வரும் காலங்களில் உள்ளூா் மற்றும் வெளிநாட்டினா் இந்த ரெயிலை வாடகைக்கு எடுத்து ரெயில் பயணம் மேற்கொள்வதன் மூலம் ரெயில்வே துறைக்கு இழப்பு ஏற்படாமல் இந்த மலை ரெயில் சேவை தொடா்ந்து இருக்கும் என்றனா்.