குற்றாலம் அருவி பகுதிகளில் தரம் இல்லாத உணவு பொருட்கள் அழிப்பு: ரூ.18 ஆயிரம் அபராதம்
- தென்மேற்கு பருவமழை காலத்தில் அதாவது ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் சீசன் களைகட்டும்.
- உணவு பாதுகாப்பு அதிகாரி நாக சுப்பிரமணியன் குற்றாலம் அருவிக்கரை பகுதிகளில் திடீரென ஆய்வுகளை மேற்கொண்டார்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கிவரும் குற்றாலம் அருவிகளில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டினரும் வந்து ஆர்வமுடன் குளித்து மகிழ்வர்.
இங்கு தென்மேற்கு பருவமழை காலத்தில் அதாவது ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் சீசன் களைகட்டும். இருப்பினும் தற்பொழுது அருவிகளில் கொட்டும் நீரில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களும் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் குற்றாலம் பகுதிகளில் உணவு மற்றும் தின்பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகள் அதிகளவில் உள்ளன. அதில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கி உண்டு மகிழ்வர். சுற்றுலா பயணிகளுக்கு தரம் இல்லாத உணவு பொருட்களை சிலர் விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரி நாக சுப்பிரமணியன் குற்றாலம் அருவிக்கரை பகுதிகளில் திடீரென ஆய்வுகளை மேற்கொண்டார்.
அப்போது கெட்டுப்போன வாழைப்பழ சிப்ஸ் 665 கிலோ மற்றும் பேரிச்சம்பழம் 152 கிலோ, செயற்கை கலர் சேர்க்கப்பட்ட அல்வா 420 கிலோ, தடைசெய்யப்பட்ட 35 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவை அங்குள்ள 2 கடைகளில் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் பினாயில் ஊற்றி அவை அழிக்கப்பட்டது. சமையலறை பகுதி சுகாதாரமற்ற நிலையில் இருந்ததால் அதற்கும் அபராதம் ரூ.18 ஆயிரம் விதிக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.