ராமேசுவரம் மீனவர்கள் 19 பேர் 2 விசைப்படகுடன் சிறைபிடிப்பு
- படகுகள் மீது தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர்.
- 19 மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்தனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை 450-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவில் அவர்கள் கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையேயான இந்திய கடல் எல்லை பகுதியில் வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது இலங்கை ராணுவத்துக்கு சொந்தமான ஒன்று ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த பகுதியை நோக்கி மின்னல் வேகத்தில் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு பயந்து கடலில் விரித்திருந்த வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட ஆயத்தமாகினர்.
இருந்தபோதிலும் இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர். மேலும் படகுகள் மீது தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். இதில், ராமேசுவரத்தை சேர்ந்த ரீகன், சசிக்குமார் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகை சிறைபிடித்தனர்.
ஜான்சன், மெட்டன், அந்தோணி டிஸ்மர், முனியசாமி, ஜேசுராஜா, சேகர், முனிய சாமி, கிளவர்சன், பிரசாந்த், பிரபாகரன், செல்வராஜ், முனியசாமி, செல்வதாமஸ், ஆரோக்கியம், ஆஸ்வார்ட் உள்ளிட்ட 19 பேரை கைது செய்தனர். மேலும் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களையும் இலங்கை கடற்படையினர் அபகரித்துக் கொண்டனர்.
பின்னர் அவர்கள் காங் கேசம் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு இலங்கை நீரியல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. 19 மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்தனர். விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராமேசுவரம் மீனவர்களுடன் முதல் முறையாக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. ஓட்டல் தொழில் முதல் விவசாய பணிகள் வரை வெளி மாநிலத்தவர் கள் தமிழகத்தில் தஞ்சம் அடைந்திருந்த நிலையில் தற்போது தற்போது மீன்பிடி தொழிலிலும் கால்தடம் பதித்துள்ளனர். ஒடிசாவை சேர்ந்தவர்கள் ராமேசுவரம் பகுதியில் தங்கி நமது மீனவர்களுடன் கடலுக்கு சென்று வருகிறார்கள்.
சமீப காலமாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்கள் நெடுந்தீவு பகுதியில் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதாகவும், இதனால் இலங்கை மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த வேண்டும் என இலங்கை மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 3-ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து கடலுக்கு சென்ற 23 மீனவர்களை 2 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்த நிலையில், இன்று மீண்டும் 19 பேர் கைதாகி இருப்பது சக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே போல் நேற்று முன்தினம் இலங்கையில் உள்ள யாழ்ப் பாணம் சிறையில் இருந்து ராமேசுவரம் மீனவர்கள் 6 பேர் விடுதலையானது குறிப்பிடத்தக்கது