கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 19-ந் தேதி விடுமுறை: பூ மார்க்கெட் வழக்கம்போல் செயல்படும் என்று அறிவிப்பு
- தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- இது தொடர்பாக வியாபாரிகள் சங்கத்தினர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.
போரூர்:
கோயம்பேட்டில் காய்கறி, பழம், பூ மற்றும் மளிகை மார்க்கெட் தனித்தனியாக செயல்பட்டு வருகிறது.
சுமார் 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளில் மொத்த மற்றும் சில்லரை விற்பனை நடந்து வருகிறது.
இதில் வெளி மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் முதல் கட்டமாக பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலின் போது கோயம்பேடு மார்க்கெட்டில் தங்கி வேலை பார்த்து வரும் அனைவரும் ஓட்டு போடுவதற்கு செல்ல வசதியாக வருகிற 19-ந்தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மார்க்கெட்டில் உள்ள காய்கறி, மளிகை, பழம் மற்றும் உணவு தானிய வளாகம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக வியாபாரிகள் சங்கத்தினர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். எனினும் 19-ந்தேதி பூ மார்க்கெட் வழக்கம் போல் செயல்படும் என்று பூ வியாபாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.