மத்தூர் அருகே நிலத்தகராறு காரணமாக பெண்ணை தாக்கிய 2 ராணுவ வீரர்கள் கைது
- கைதான 2 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.
- பெண்ணை தாக்கிய சம்பவத்தில் 2 ராணுவ வீரர்கள் கைதான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் போலீஸ் நிலையம் எல்லைக்கு உட்பட்ட மஜீத்கொல்ல அள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. விவசாயி. இவரது மகள் வெண்பா (வயது20).
அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் வித்யசாகர் (25), அவரது நண்பர் சந்தோஷ் (25). இருவரும் ராணுவ வீரர்கள் ஆவர்.
இந்நிலையில் மூர்த்திக்கும், வித்யசாகருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்ததாக தெரிகிறது.
இதற்கிடையே சந்தோஷ், வித்யசாகர் ஆகிய 2 பேரும் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று வித்யசாகருக்கும், மூர்த்திக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த வெண்பா அதனை தட்டிக்கேட்டார்.
உடனே வித்யசாகரும், சந்தோஷூம் சேர்ந்து மூர்த்தியையும், வெண்பாவையும் சரமாரியாக தாக்கினர். இதில் தந்தை, மகள் 2 பேரும் காயமடைந்தனர். உடனே அவர்களை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து வெண்பா மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராணுவ வீரர்களான வித்யசாகர், சந்தோஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். கைதான 2 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.
பெண்ணை தாக்கிய சம்பவத்தில் 2 ராணுவ வீரர்கள் கைதான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.