மின்கம்பத்தில் பெண்ணை கட்டி வைத்து சித்ரவதை சம்பவத்தில் மேலும் 2 பேருக்கு தொடர்பு- 2 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை
- வழக்கில் மேலும் இரண்டு பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
- தனிப்படை போலீஸ் தலைமறைவாகியுள்ள இரண்டு பேரை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
அருமனை:
அருமனை அருகே மேல்புறம் வெங்ஙனாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் கலா (வயது 40).
கணவரை இழந்த இவர் குழந்தையுடன் அந்த பகுதியில் வசித்து வருகிறார். கலா மேல்புறம் சந்திப்பு வழியாக கடைக்கு செல்லும் போது அடிக்கடி அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் சிலர் கலாவிடம் கேலி செய்வது ஆபாசமாக பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இதனால் ஆட்டோ டிரைவருக்கும் கலாவுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது .
இந்நிலையில் நேற்று காலை கலா பொருட்கள் வாங்குவதற்காக ஆட்டோ ஸ்டாண்ட் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது டிரைவர்கள் சிலர் கலாவிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர்கள் கலாவை பிடித்து அந்த பகுதியில் உள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்துள்ளனர். இதையடுத்து கலா கூச்சலிட்டார். அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கலா மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு இருப்பது குறித்து அருமனை போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த கலாவை மீட்டனர். இதுகுறித்து கலா அருமனை போலீசில் புகார் செய்தார்.புகாரின் பேரில் பாகோடு பகுதியைச் சேர்ந்த சசி (45), விஜயகாந்த் (37), வினோத் (44) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது பெண் வன்கொடுமை சட்டம் உட்பட 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள னர்.
இந்த வழக்கில் மேலும் இரண்டு பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட் டுள்ளது. தனிப்படை போலீஸ் தலைமறைவாகி யுள்ள இரண்டு பேரை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். போலீசார் தேடுவது அறிந்த 2 பேரும் கேரளாவிற்கு தப்பிச் சென்றுவிட்டனர். அவர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவ டிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். மின்கம்பத்தில் இளம்பெண் ஒருவர் கட்டி வைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.