தமிழ்நாடு (Tamil Nadu)

வருமானவரித்துறை அதிகாரிகள் என கூறி கொள்ளையடித்த வழக்கில் மேலும் 2 பேர் கைது

Published On 2024-07-05 04:27 GMT   |   Update On 2024-07-05 04:27 GMT
  • சுதாகரின் உறவினர்கள், உடனடியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தனர்.
  • ஏற்கனவே மணப்பாறை போலீசாரால் கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

துறையூர்:

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வீரப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 44). இவர் அப்பகுதியில் மெடிக்கல் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடைக்கு கடந்த 1-ந் தேதி சென்ற மர்ம நபர்கள் தங்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் எனக் கூறி அறிமுகம் செய்து கொண்டு, உங்களது கடையில் சட்டவிரோதமாக மருத்துவம் பார்ப்பதாக புகார் வந்துள்ளதாக கூறி கடையை சோதனை இட்டுள்ளனர்.

பின்னர் சுதாகரை விசாரணைக்கு வாருங்கள் என கூறி அழைத்து சென்றனர். தொடர்ந்து சுதாகரின் உறவினருக்கு போன் செய்த மர்ம நபர்கள், அவரை விடுவிக்க ரூ.20 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுதாகரின் உறவினர்கள், உடனடியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மணப்பாறை போலீசார் பணம் கேட்டு மிரட்டிய மர்ம நபர்களை மணப்பாறை-திருச்சி பைபாஸ் சாலையில் வைத்து கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் கேரளாவை சேர்ந்த நவ்ஷாத் (45), துறையூர் அருகே உள்ள வைரி செட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த சேகர் (42), வலையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் (44), மதுரையை சேர்ந்த மாரிமுத்து (53), சென்னையை சேர்ந்த வினோத் (37), தொப்பம்பட்டியை சேர்ந்த கார்த்திகேயன் (37) என்பது தெரியவந்தது.

இந்த 6 பேரும் பேரும் ஒரே குழுவாக சேர்ந்து, இதுபோன்று பல்வேறு இடங்களில் தங்களை பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அதிகாரிகள் எனக்கூறி கைவரிசை காட்டியதும் தெரிய வந்தது. இவர்களிடம் மேலும் விசாரணை செய்ததில், இந்தக் குழுவில் உள்ள வினோத், நவ்ஷத், கார்த்திக், மாரிமுத்து ஆகிய நான்கு நபர்கள், மணப்பாறையை சேர்ந்த சக்திவேல் (30), திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (29) ஆகியோருடன் கூட்டு சேர்ந்து, துறையூர் சௌடாம்பிகை அம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் ஜவுளி வியாபாரியான மதுரை வீரன் (60) என்பவரின் வீட்டிற்கு கடந்த மாதம் 17-ந் தேதி சென்று, அங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் எனக்கூறி, அவரது வீட்டில் 5 லட்சம் பணம், தங்க நகை 5 பவுன் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றதும் தெரிய வந்தது.

மணப்பாறை வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த சக்திவேல், மணிகண்டன் ஆகிய இருவரையும் துறையூர் போலீசார் வலை வீசி தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று இருவரையும் கைது செய்த துறையூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இச்சம்பவத்தில் கொள்ளை போன நகை, பணம் மற்றும் குற்ற செயலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவை ஏற்கனவே மணப்பாறை போலீசாரால் கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News