தமிழ்நாடு

ரவுடிகளுக்கு நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி: 2 வாலிபர்கள் கைது- 4 வெடிகுண்டுகள் பறிமுதல்

Published On 2023-09-25 05:23 GMT   |   Update On 2023-09-25 05:23 GMT
  • தென்மாவட்ட ரவுடிகளுக்கு நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி அளித்து வந்தது தெரியவந்தது.
  • மறைத்து வைத்திருந்த 2 அரிவாள், 4 நாட்டு வெடிகுண்டுகள், 30 கிராம் வெடி மருந்து ஆகியவற்றை கைப்பற்றி 2 பேரையும் கைது செய்தனர்.

திருச்சி:

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே தாயனூர் பகுதியில் ரவுடிகளுக்கு நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க பயிற்சி அளிப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.

தகவல் அறிந்த சோமரசம்பேட்டை போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர்.

அப்போது அதவத்தூர் சந்தை புதிய கட்டளை வாய்க்கால் அருகாமையில் சந்தேகம்படும்படியாக 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை விடாமல் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் தென்மாவட்ட ரவுடிகளுக்கு நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி அளித்து வந்தது தெரியவந்தது.

பின்னர் அங்கு மறைத்து வைத்திருந்த 2 அரிவாள், 4 நாட்டு வெடிகுண்டுகள், 30 கிராம் வெடி மருந்து ஆகியவற்றை கைப்பற்றி 2 பேரையும் கைது செய்தனர்.

கைதானவர்கள் சோமரசன்பேட்டை தாயனூர் கீழக்காடு கீழபுறம் பகுதியை சேர்ந்த சிவசக்தி (வயது 21), தாயனூர் வடக்கு தெருவை சேர்ந்த கர்ணன் (23) என்பது தெரியவந்தது.

மேலும் பிடிப்பட்ட 2 வாலிபர்கள், நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து ரவடிகள் மற்றும் சமூக விரோதிகளுக்கு சப்ளை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

யார் யாருக்கு அவர்கள் வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் சப்ளை செய்தார்கள் என்று புலன் விசாரணை நடந்து வருகிறது. கைதான இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ரவுடிகளுக்கு வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி அளித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News