மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு மறியல் போராட்டம்- முத்தரசன் உள்பட 200 பேர் கைது
- ஏழையின் பணம் சுரண்டப்படுதல் குறித்த விளக்க நாடகம் செய்து காண்பித்தனர்.
- மத்திய ஆட்சிப்பொறுப்பில் உள்ள மோடி தலைமையிலான அரசு மக்கள் விரோத கொள்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
சென்னை:
விலைவாசி உயர்வு, வேலையின்மை ஆகியவற்றை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி வட சென்னை மாவட்டம் சார்பில் பாரிமுனையில் இன்று மறியல் போராட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு மாநில செயலாளர் முத்தரசன் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன், மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தனர்.
மத்திய அரசின் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து பாடையில் கியாஸ் சிலிண்டரை சுமந்து வருவது போன்றும், ஏழையின் பணம் சுரண்டப்படுதல் குறித்த விளக்க நாடகம் செய்து காண்பித்தனர்.
இதில் 200-க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர்.போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாநில செயலாளர் முத்தரசன் உள்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக மாநிலச்செயலாளர் முத்தரசன் கூறியதாவது:-
மத்திய ஆட்சிப்பொறுப்பில் உள்ள மோடி தலைமையிலான அரசு மக்கள் விரோத கொள்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
மாநிலங்களின் அதிகாரங்களை பறிக்க முயற்சிக்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் என்ற பெயரில் கூட்டாட்சி கோட்பாடுகளை தகர்த்து வருகிறது. தமிழ்நாடு உட்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கவர்னர் மாளிகை வழியாக போட்டி அரசு நடத்தி வருகிறது.
இதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தொடர் மறியல் போராட்டம் நடந்து வருகிறது. விலைவாசி உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பல கோடி மக்கள் வேலை வாய்ப்பை இழந்து வேலையில்லாமல் இருக்கிறார்கள். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.