செய்திகள்

சட்டசபையில் மு.க.ஸ்டாலின் சட்டை கிழிப்பு: மனவேதனையில் தி.மு.க. நிர்வாகி தற்கொலை

Published On 2017-02-19 14:02 GMT   |   Update On 2017-02-19 14:02 GMT
தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டை கிழிக்கப்பட்டதால் மனவேதனை அடைந்த தி.மு.க. நிர்வாகி தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான புதிய அரசின் மெஜாரிட்டியை நிரூபிப்பதற்காக சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபாநாயகர் உத்தரவின் பேரில் தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.

அப்போது சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினின் சட்டை கிழிந்தது.

கடலூர் முதுநகர் சோனாஞ்சாவடியை சேர்ந்த தி.மு.க. கிளை செயலாளரும், மீனவருமான வடிவேல் (வயது 45) வீட்டில் டி.வி.யில் இந்த காட்சியை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்.

மு.க.ஸ்டாலின் சட்டையை கிழித்து விட்டார்களே என்று தனது ஆதங்கத்தை அந்த பகுதி மக்களிடம் தெரிவித்தார். மனவேதனையுடன் காணப்பட்ட அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடைக்கு சென்றிருந்த வடிவேலின் மனைவி செல்வி (32) வீட்டுக்கு வந்து பார்த்தபோது வடிவேல் தற்கொலை செய்தது அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

செல்வியின் அழுகை சத்தம் கேட்ட அவரது மகள்கள் 3 பேரும் அங்கு வந்தனர். அவர்களும் தந்தை வடிவேல் உடலை பார்த்து கதறினர்.

இது பற்றி கடலூர் முதுநகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இந்த தகவல் மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்துக்கும், ஒன்றிய செயலாளர் காசி நாதனுக்கும் தெரிவிக்கப்பட்டது.

தி.மு.க. மீனவர் அணி முன்னாள் செயலாளர் பழனிவேல் மற்றும் நிர்வாகிகள் வடிவேலின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினர்.

Similar News