செய்திகள்

இன்று முழு சந்திர கிரகணம் - 103 நிமிடங்கள் நீடிக்கும்

Published On 2018-07-27 02:54 GMT   |   Update On 2018-07-27 02:54 GMT
21-ம் நூற்றாண்டிலேயே மிக நீளமான முழு சந்திர கிரகணம் இன்று ஏற்படுகிறது. இது 103 நிமிடங்கள் நீடிக்கும். இதைப் பார்வையிட சென்னை பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. #LunarEclipse
சென்னை:

சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி நேர்க்கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த முழு சந்திர கிரகணம் இரவு 1 மணிக்கு தொடங்குகிறது. 103 நிமிடங்கள் தொடர்ந்து நீடிக்கிறது. அதிகாலை 2.43 மணிக்கு முடிக்கிறது. அப்போது நிலா, ரத்த சிவப்பு நிறத்தில் காட்சி தரும்.

முன்னதாக இந்த சந்திரகிரகணம் இன்று இரவு 11.54 மணிக்கு பகுதி சந்திர கிரகணமாக தொடங்குகிறது.

இந்த 21-ம் நூற்றாண்டின் மிக நீளமான முழு சந்திர கிரகணம் இதுதான் என்பது குறிப்பிடத்தகுந்த அம்சம்.

மேலும், புதன், வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய் ஆகிய 5 கிரகணங்களும் ஒன்றாக அணி வகுத்து வருகிற தருணத்தில் இந்த முழு சந்திர கிரகணம் நிகழ்வது சிறப்பு பெறுகிறது.

அடுத்து இதே போன்றதொரு நீளமான முழு சந்திர கிரகணம் 2029-ம் ஆண்டு, ஜூன் மாதம் 25-ந் தேதி நிகழும். அதுவும் 103 நிமிடங்கள் நீடிக்கும்.

இந்த சந்திரகிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். இதனால் தீங்கு ஏற்படாது.



பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் முழு சந்திர கிரகணத்தைத் நேரிடையாகவும், தொலைநோக்கிகள் மூலமாகவும் பார்த்து பயன்பெறும் வகையில் சென்னை, காந்தி மண்டபம் சாலையில் உள்ள பி.எம்.பிர்லா கோளரங்கம், பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இந்தியாவில் தெரியக்கூடிய இதுபோன்ற ஒரு முழு சந்திர கிரணம் மீண்டும் அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 21-ந் தேதி இரவில் நிகழ உள்ளது.

இந்த தகவல்களை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் பொறுப்பு செயல் இயக்குனர் சவுந்தரராஜ பெருமாள், சென்னையில் நேற்று வெளியிட்டார். #LunarEclipse

Tags:    

Similar News