செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 4 ஆண்டுகளில் 4000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு - அமைச்சர் தங்கமணி

Published On 2018-08-25 09:47 GMT   |   Update On 2018-08-25 09:47 GMT
தமிழகத்தில் அடுத்த 4 ஆண்டுகளில் 4,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஈரோட்டில் அமைச்சர் தங்கமணி கூறினார். #MinisterThangamani
ஈரோடு:

ஈரோடு மாநகரின் முக்கிய சாலைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் செல்லும் மேல்நிலை கம்பிகளை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக நிலத்தடியில் மின் கேபிள் பதிக்கும் பணிக்கு ரூ 58.96 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலத்தடி மின் கேபிள் பதிக்கும் பணிக்கான தொடக்க நிகழ்ச்சி இன்று ஈரோடு மின்வாரிய அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார்.

எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, சிவசுப்பிரமணி, எம்.பி. செல்வ குமாரசின்னையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன், தங்கமணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிலத்தடியில் மின் கேபிள் பதிக்கும் பணியை தொடங்கி வைத்தனர்.

பின்னர் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னைக்கு அடுத்தபடியாக ஈரோட்டில்தான் ரூ 58.96 கோடி மதிப்பில் பூமிக்கடியில் மின் கேபிள் பதிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சாதாரணமாக நிலத்திற்கு மேல் மின்கம்பிகள் அமைப்பதை விட நிலத்தடியில் மின் கேபிள் பதிக்கும் பணிக்கு கூடுதலாக 10 சதவீதம் செலவாகும்.

எனினும் நிதி நிலைமை பொறுத்து ஒவ்வொரு பகுதியாக இந்த பணி நடக்க உள்ளது. 2011-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தமிழகம் மின் மிகை மாநிலமாக மாற்றப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி 2015-ம் ஆண்டு மின் மிகை மாநிலமாக அவர் மாற்றிக் காட்டினார். அவரது வழியில் நாங்களும் தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றி வருகிறோம். 2005-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது 3 நாட்களில் மின் விநியோகம் செய்யப்பட்டது.

அதற்கு முக்கிய காரணம் இந்த நிலத்தடியில் மின் கேபிள் பதிக்கும் முறைதான். மின்வாரிய ஊழியர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்து வருகிறார்கள். போலீஸ் துறைக்கு அடுத்து 24 மணி நேரமும் மின் துறை ஊழியர்கள் தான் வேலை செய்து வருகிறார்கள்.

தமிழகத்தில் 6 லட்சம் கிலோ மீட்டர் தூரம் மின் கம்பங்கள் கொண்டு செல்லப்படும். தயாரிக்கப்படும் மின்சாரத்தை அனைத்து பகுதிக்கும் கொண்டு செல்ல மின் டவர் அவசியம். இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் அவர்களுக்கு மாற்று ஏற்பாடு, நஷ்டஈடு அதிகமாக கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

தட்கல் முறை கடந்த 2017-ம் ஆண்டுதான் அறிமுகப்படுத்தப்பட்டது. இது விவசாயிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை 9 ஆயிரத்து 865 பேர் தட்கல் முறையில் மின் வினியோகம் பெற்று வருகின்றனர்.

இதன் மூலம் 1,000 மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அடுத்த 4 ஆண்டுகளில் 4,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு செய்யப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றின் 7 பேரேஜ் மூலம் 210 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக தயாரிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் வெள்ளம் பாதித்த மக்களுக்காக 256 டிரான்ஸ்பார்மர்கள் 40 ஆயிரம் மின் மீட்டர்கள் வழங்கப்படும்.
 
இவ்வாறு அவர் கூறினார். #MinisterThangamani

Tags:    

Similar News