செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பிரதமர் மோடி அறிவிப்பார் - முரளிதர ராவ்

Published On 2019-01-23 08:40 GMT   |   Update On 2019-01-23 08:40 GMT
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பிரதமர் மோடி முறையாக அறிவிப்பார் என்று மதுரையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது முரளிதர ராவ் கூறினார். #MuralidharRao #PMModi #Parliamentelection
அவனியாபுரம்:

மதுரை பெருங்குடி அருகே உள்ள மண்டேலா நகர் ரிங் ரோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் நாட்டு விழா, பா.ஜ.க. மாநாடு நடைபெறும் இடங்களை மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் முரளிதர ராவ் ஆகியோர் பார்வையிட்டனர்.

பின்னர் முரளிதர ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசியல், கலை, பண்பாடு ஆகியவற்றில் மதுரை முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும். இங்கு பிரதமரின் முதல் கூட்டம் நடைபெறுவது சிறப்பு வாய்ந்தது.

வருகிற 27-ந் தேதி நடைபெறும் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா மற்றும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் தென் மாவட்டங்களில் இருந்து குறிப்பாக 10 பாராளுமன்ற தொகுதிகளில் இருந்து 2 லட்சம் தொண்டர்கள், மோடியை வரவேற்க தயாராக உள்ளனர்.

2014-ல் இருந்து பா.ஜ.க. அரசு இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழ்நாட்டுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு கூடும் முதல் கூட்டம் என்பதால் பெரும் வரவேற்பு உள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்காலத்தில் 4 வழிச்சாலை, கப்பல் போக்குவரத்து துறை, மருத்துவ காப்பீடு, பாதுகாப்பு துறை தளவாட உற்பத்தி ஆகிய துறைகளில் பெரும் சாதனை புரிந்துள்ளோம்.



பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து கட்சியின் தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோர் மட்டுமே முடிவு செய்வார்கள். அது பற்றி நாங்கள் கூற முடியாது.

தி.மு.க., அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி என்று பலர் கருத்து கூறுகின்றனர். ஆனால் தேர்தல் அறிவிப்பு வந்தவுடன்தான் கூட்டணி அறிவிப்பு வரும். அதனை பிரதமர் மோடி முறையாக அறிவிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார். #MuralidharRao #PMModi  #Parliamentelection

Tags:    

Similar News