செய்திகள்

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் 5 நாட்களில் 7 பேர் கொலை

Published On 2019-03-29 06:57 GMT   |   Update On 2019-03-29 06:57 GMT
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 5 நாட்களில் 7 பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்து உள்ளது.

செங்கல்பட்டு:

பாராளுமன்ற தேர்தல் களம் பரபரக்கும் நேரத்தில் நடந்த இந்த படுகொலைகள் பொது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் 2 கொலைகள் நடந்து உள்ளன.

அனைத்து கொலைகளும் நன்கு திட்டமிடப்பட்டு எதிரிகளை பின்தொடர்ந்து பொது மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்துள்ளது.

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மணிமங்கலம் காந்தி நகரை சேர்ந்தவர் ரவுடி பாஸ்கர். கடந்த 24-ந் தேதி அவர் ஆரம்பாக்கத்தில் உள்ள மதுக்கடையில் நின்ற போது மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த புவனேஸ்வரியை போலீசார் கைது செய்தனர். கணவர் கந்தன் கொலைக்கு பழிக்குப்பழியாக அவர் கூலிப்படையை ஏவி பாஸ்கரை தீர்த்து கட்டி இருந்தார்.

இதேபோல் கடந்த 24-ந் தேதி மறைமலைநகரை அடுத்த கோலாபுரத்தில் முருகன் என்பவர் வீட்டில் கொலை செய்யப்பட்டார். அவரை மனைவி மஞ்சுளா, கள்ளக்காதலன் சிவா ஆகியோர் கொலை செய்து இருந்தனர்.

அதே நாளில் செங்கல்பட்டு அருகே உள்ள மேலரி பாக்கம் ஏரியில் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் சூர்யா படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். நண்பரின் காதலை சேர்த்து திருமணம் செய்து வைத்த தகராறில் இந்த கொலை நடந்து இருந்தது.

இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேர் உத்திரமேரூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

கடந்த 25-ந் தேதி மறைமலைநகரை அடுத்த மேலகோட்டையூரில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று விசாரணை நடந்து வருகிறது.

மறுநாள் (26-ந் தேதி) கூடுவாஞ்சேரி நங்கூரம் நகரை சேர்ந்த குட்டா என்கிற வினோத் தீர்த்துக்கட்டப்பட்டார்.

நேற்று முன்தினம் மதியம் (27-ந் தேதி) திருவொற்றியூர் சுனாமி குடியிருப்பில் வசித்து வந்த ரவுடி கிச்சா என்ற கிருஷ்ணமூர்த்தி லோடு ஆட்டோவை ஓட்டிக் கொண்டு அரும்பாக்கத்துக்கு வந்தார்.

அப்போது பின் தொடர்ந்து வந்த கும்பல் பொது மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியிலேயே ஓடஓட விரட்டி கிருஷ்ணமூர்த்தியை கொலை செய்தனர். இந்த வழக்கில் 5 பேர் சிக்கி இருக்கிறார்கள்.

நேற்று காலை (28-ந் தேதி) பாடியை சேர்ந்த தே.மு.தி.க. பிரமுகர் பாண்டியனை மர்ம கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர்.

அடுத்தடுத்து நடந்த இந்த தொடர் கொலை சம்பவங்களால் பொது மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் குற்றச் செயல்கள் நடந்த பின்பு நடவடிக்கை எடுப்பதை விட்டு கூலிப் படைகளாக செயல்படுபவர்களை அழிக்க உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘ஒவ்வொரு குற்றவாளிகளின் செயல்பாடுகளையும் கண்காணித்து வருகிறோம். ஜெயிலில் இருந்துவெளி வரும் ரவுடிகள் மற்றும் குற்றப்பின்னணி உள்ளவர்கள் அனைவரும் உளவுப் பிரிவு போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். குற்றங்களை தடுக்க கூலிப்படையினர் மற்றும் குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Tags:    

Similar News