செய்திகள்
திருவாரூரில் சம்பா நாற்றுகள் நடவு செய்யப்பட்ட வயல்கள் முற்றிலும் மழைநீரில் மூழ்கி கிடப்பதை காணலாம்

தொடர் கனமழையால் வெள்ளக்காடான டெல்டா மாவட்டங்கள்- 26 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் மூழ்கின

Published On 2021-11-03 04:06 GMT   |   Update On 2021-11-03 05:43 GMT
தமிழக அரசு நெற்பயிர்களின் பாதிப்புக்கு உரிய இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர்:

தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த 28-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதில் தஞ்சை, நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால் சுமார் 10,000 ஏக்கரில் சம்பா இளம் நாற்றுகள் முற்றிலும் மூழ்கி உள்ளது. மேலும் மழை இடைவிடாது பெய்து வருவதால் வயல்வெளிகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் அறுவடைக்கு தயாரான குறுவை பயிர்கள் சாய்ந்து இருக்கின்றன.

இதேபோல் திருவாரூர் மாவட்டத்திலும் தொடர் மழையால் 10,000 ஏக்கரில் மழைநீர் சூழ்ந்து நெற்பயிர்கள் மூழ்கி அழுகும் அபாயத்தில் உள்ளது. பிரசித்தி பெற்ற பிறவிமருந்தீஸ்வரர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்ததால் அதனை வடியவைக்கும் பணியில் கோவில் நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு ஓட்டு வீடுகள் இடித்து விழுந்தன.

நாகை மாவட்டத்தில் அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிர்கள் மற்றும் சம்பா-தாளடி இளம் நாற்றுகள் உள்பட சுமார் 6,000 ஏக்கரில் மூழ்கி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 300 ஏக்கரில் நெற்பயிர்கள் மூழ்கி அழுகும் அபாயத்தில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

டெல்டா மாவட்டம் முழுவதும் பெய்து வரும் இடைவிடாத தொடர் கனமழையால் வயல்வெளி எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிர்களையும், இளம் நாற்றுகளான சம்பா-தாளடி பயிர்களையும் காப்பாற்றுவதாக விவசாயிகள் தண்ணீரை வடியவைக்க போராடி வருகின்றனர். வடிகால் வாய்க்கால்கள் சரிவர தூர்வாரப்படாததால் வயல்களில் தேங்கி உள்ள தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.



இந்த மழை இன்னும் நான்கு நாட்களுக்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் தற்போது டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து போய் உள்ளனர்.

மழை இரண்டு நாட்களில் முழுவதும் நின்று, வயல்களில் தேங்கி உள்ள தண்ணீரை வெளியேற்றினால் மட்டுமே நெற்பயிர்களை காப்பாற்ற முடியும். தற்போது உள்ள நிலையில் இளம்நாற்றுகளான சம்பா-தாளடி பயிர்கள் பாதிக்கு மேல் அழுகி விட்டதால் புதிய நாற்றுகளை தயார் செய்யவும் முடியாத நிலையில் விவசாயிகள் தவித்து வருகின்றனர். அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிர்கள் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கரில் மழைநீரில் சாய்ந்து கிடப்பதால் முற்றிலும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாய சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் தொடர்மழை காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

எனவே டெல்டா மாவட்டங்களில் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை அதிகாரிகள் பார்வையிட்டு முறையான கணக்கெடுப்பை நடத்தி உண்மையான நிலவரத்தை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். தமிழக அரசு நெற்பயிர்களின் பாதிப்புக்கு உரிய இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags:    

Similar News