செய்திகள்
ராமதாஸ்

ரெயில்வேயை தனியார் மயமாக்கும் முயற்சியை மீண்டும் தொடங்க கூடாது- ராமதாஸ்

Published On 2021-11-20 08:18 GMT   |   Update On 2021-11-20 08:18 GMT
ரெயில்களை தனியார்மயமாக்கும் முயற்சி தோற்றதாகவே இருக்கட்டும் என்றும் மீண்டும் அந்த முயற்சியை மத்திய அரசு தொடங்கக் கூடாது என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தென்னக ரெயில்வே சார்பில் தமிழ்நாட்டிலும், தமிழ்நாட்டிலிருந்தும் இயக்கப்படும் 13 எக்ஸ்பிரஸ் ரெயில்களை தனியார் மயமாக்கும் முயற்சிகள் வெற்றிபெறவில்லை. இதன் மூலம் ரெயில் சேவையை ஏழை மற்றும் நடுத்தர மக்களிடமிருந்து தட்டிப் பறிக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டிருக்கிறது.

அகில இந்திய அளவில் கூட தில்லியிலும், மும்பையிலும் சில ரெயில்களை மட்டும் ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது. தனியார்மயமாக்கப்படவிருந்த ரெயில்களில் 95 சதவீதத்துக்கும் கூடுதலானவற்றை ஏலம் எடுக்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை.

உண்மையில், ரெயில்களை தனியார் மயமாக்க நினைத்த மத்திய அரசுக்கு இது பெரும் ஏமாற்றமாக இருக்கலாம். ஆனால், நீண்ட தொலைவு பயணத்திற்கு ரெயில்களையே நம்பியிருக்கும் மக்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தி தான். ரெயில்கள் தனியார்மயமாகி விடக்கூடாது என்பது தான் பெரும்பான்மையினரின் விருப்பம்.

ரெயில்களை தனியார் மயமாக்கும் முயற்சி தோல்வியடைந்திருந்தாலும் அது தற்காலிகமானது தான். ரெயில்கள் தனியார்மயமாக்கப்படும் வாய்ப்புகள் இன்னும் முழுமையாக விலகவில்லை என்பது தான் உண்மை. வருவாய் பகிர்வு நிபந்தனையை மத்திய அரசு தளர்த்தினாலோ, பெரும்பான்மை ரெயில்களை தனியார்மயமாக்க மத்திய அரசு முன்வந்தாலோ நிலைமை தலைகீழாக மாறிவிடும்.

அதன்பின்னர் தனியார் நிறுவனங்கள் வைத்தது தான் சட்டம் என்பதால், ரெயில்வே துறை தனியார் பெரு நிறுவனங்களின் லாப வேட்டைக்காடாகிவிடும். அவற்றின் ஆதிக்கத்தை யாராலும் தடுக்க முடியாது.

ரெயில்களை இயக்க தனியார் நிறுவனங்கள் முன்வராததைக் காரணம் காட்டி, வருவாய் பகிர்வு நிபந்தனையை ரத்து செய்யவும், அதிக எண்ணிக்கையிலான ரெயில்களை தனியார் மயமாக்கவும் மத்திய அரசு முன்வரக்கூடும். அது மக்களுக்கோ, மத்திய அரசுக்கோ நன்மையளிப்பதாக இருக்காது.

மாறாக, தனியார் நிறுவனங்கள் இந்திய மக்களையும், ரெயில்வே துறையின் கட்டமைப்புகளையும் சுரண்டுவதற்கே வழிவகுக்கும். எனவே, ரெயில்களை தனியார்மயமாக்கும் முயற்சி தோற்றதாகவே இருக்கட்டும்; மீண்டும் அந்த முயற்சியை மத்திய அரசு தொடங்கக் கூடாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News