10 சோதனை சாவடிகளிலும் 24 மணி நேரமும் கண்காணிப்பு: போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
- திருவள்ளூர் மாவட்டத்தில் 5 இடங்களில் நிரந்தரமாகவும், 5 இடங்களில் தற்காலிகமாகவும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.
- கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள புறகாவல் நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அருகே தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான எளாவூரில் நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி உள்ளது. இங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் திடீரென்று ஆய்வு செய்தார்.
அப்போது ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்கள் தொடர்பான போலீசாரின் சோதனை எவ்வாறு உள்ளது? அங்கு பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது? என்பதை அவர் நேரில் ஆய்வு செய்து போலீசாருக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் 5 இடங்களில் நிரந்தரமாகவும், 5 இடங்களில் தற்காலிகமாகவும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கியமான சோதனைச்சாவடி இந்த எளாவூர் சோதனைச்சாவடி ஆகும். மாவட்டம் முழுவதும் உள்ள 10 சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. குறிப்பாக இந்த எளாவூர் சோதனைச்சாவடி என்பது, ஆந்திர மாநிலம் இருந்து விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களுக்கான முக்கியமான நுழைவு வாயில் ஆகும். அதனால் இங்கு எல்லா வாகனங்களும் 24 மணி நேரமும் முழுமையாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 5 போலீசார் பணியில் உள்ளனர்.
கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள புறகாவல் நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். சோதனைச்சாவடி இன்றி சுற்றி உள்ள பிற வழிகளில் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களை சோதனை செய்வதற்கு ஆந்திர போலீசாருடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கிரியா சக்தி, இன்ஸ்பெக்டர் டில்லி பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.