3 ஆண்டுகளாக தொடரும் பாசம்: மனைவியின் கல்லறைக்கு தினமும் 2 முறை சென்று வழிபடும் கட்டிடத் தொழிலாளி
- அன்பாக கவனித்து வந்த மனைவி இறந்ததால் அவரது பிரிவை சுப்பிரமணியனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
- நாள் முழுவதும் தன் வாழ்வில் என்னென்ன நடந்தது என்பதை கல்லறை முன்பு கூறுவார்.
கோவை:
கணவன்-மனைவி அன்பு என்பது ஆத்மார்த்தமானது. அன்பான மனைவிக்கு கணவனிடம் உள்ள அன்பு போற்றத்தக்கது. ஏதோ ஒரு காரணத்தால் தங்கள் துணை இறந்த பிறகு அவர்களை மறக்க முடியாமல் தவிக்கும் கணவன், மனைவியை இன்றும் பார்க்கிறோம்.
அதேபோல் இறந்த தன் மனைவியை மறக்க முடியாமல் அவரது கல்லறைக்கு தினமும் சென்று வழிபட்டு வருகிறார் கோவையைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி. கோவை ரத்தினபுரியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 55). இவரது மனைவி சரோஜினி. இவர் கணவர் சுப்பிரமணியன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். இதனால் இவர்களது இல்லற வாழ்வு மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில் சரோஜினி உடல் நலக்குறைவால் திடீரென மரணம் அடைந்தார். தினமும் அன்பாக கவனித்து வந்த மனைவி இறந்ததால் அவரது பிரிவை சுப்பிரமணியனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனைவியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மறுநாள் முதல் அவரது கல்லறைக்கு சுப்பிரமணியன் செல்லத் தொடங்கினார். தினமும் வேலைக்கு செல்வதற்கு முன்பாக காலையில் சரோஜினியின் கல்லறைக்கு செல்வதை வழக்கமாக கொண்டார். அங்கு கல்லறை முன்பு விளக்கேற்றி வழிபட்டு விட்டு வேலைக்கு செல்வார்.
பின்னர் மாலையிலும் கல்லறைக்கு சென்று வணங்குவார். அப்போது அன்று நாள் முழுவதும் தன் வாழ்வில் என்னென்ன நடந்தது என்பதை கல்லறை முன்பு கூறுவார். சரோஜினி இறந்தாலும் தன்னுடனேயே வாழ்வதாக எண்ணி இவ்வாறு அவர் பேசி வருகிறார்.
தனது மனைவி மீது சுப்பிரமணியன் கொண்டுள்ள அன்பை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். இதுபற்றி சுப்பிரமணியன் கூறுகையில் என் மனைவி சரோஜினி, அதிக பாசத்துடன் என்னை கவனித்து வருகிறார். அவரது இழப்பை என்னால் தாங்க முடியவில்லை. ஷாஜகான் தனது மனைவிக்காக தாஜ்மகால் கட்டியது போல் எனது மனைவிக்காக நானும் எதாவது ஒன்று செய்ய வேண்டும் என்பது லட்சியமாக உள்ளது. விரைவில் அதனை செய்து முடிப்பேன் என்றார்.