தமிழக அரசு சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீட்டில் 33 சதவீதம் உயர்த்தியது நியாயம் இல்லை- ஜி.கே.வாசன்
- பொருளாதாரம் இல்லாமல் தவிக்கும் சாதாரண மக்கள் தான் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள்.
- பொது மக்கள் மீது கூடுதல் சுமையைத் திணிக்கும் வகையில் சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீடு அமையக்கூடாது.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசு, சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீட்டில் முறையாக மதிப்பிட வேண்டும். அதாவது அரசு, சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீட்டில் சுமார் 33 சதவீதம் உயர்த்தியது நியாயமில்லை. குறிப்பாக மாநிலத்தில் சொத்துக்களை வழிகாட்டி மதிப்பீடு செய்யும் முறை அரசுக்கு உண்டு. இருப்பினும் பொது மக்களின் சிரமத்தை அறிந்து, ஆலோசனையைக் கேட்டு மதிப்பீடு செய்திருக்க வேண்டும்.
ஆனால் அரசு, பொது மக்களின் கருத்தைக் கேட்காமல் சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீட்டில் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி நடைமுறைப்படுத்துவதால் சிறிய அளவிலான சொத்து (வீடு, மனை, நிலம்) வாங்க முன்வரும், போதுமான பொருளாதாரம் இல்லாமல் தவிக்கும் சாதாரண மக்கள் தான் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள்.
ஐகோர்ட்டு உத்தரவை அரசு கவனத்தில் கொள்ளாமல் சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீட்டில் சுமார் 33 சதவீதம் கூடுதல் கட்டணத்தை வசூல் செய்வது உயர்நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயல். எனவே தமிழக அரசு, பொது மக்கள் மீது கூடுதல் சுமையைத் திணிக்கும் வகையில் சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீடு அமையக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டு சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீடு செய்ய முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.