தமிழ்நாடு

வடலூரில் ஆக்கிரமிப்பு இடம் 46 ஏக்கரை பறிமுதல் செய்து சர்வதேச மையம் அமைக்கலாம்- டைரக்டர் கவுதமன்

Published On 2024-02-25 04:16 GMT   |   Update On 2024-02-25 04:16 GMT
  • சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னரே பசிப்பிணியை போக்க அணையா அடுப்பை ஏற்றி வைத்தவர்.
  • ஆக்கிரமிப்பு விவகாரம் அரசுக்கு தெரியாதா? இந்த ஆக்கிரமிப்பு இடங்களை பறிமுதல் செய்ய முடியவில்லை.

வடலூர்:

தமிழ்பேரரசு கட்சியின் நிறுவனத்தலைவர் திரைப் பட டைரக்டர் கவுதமன் வடலூரில் சத்தியஞான சபை, சத்திய தருமச்சாலை ஆகிய இடங்களில் வழி பாடு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

பசியை தீ என்றும், பிணி என்றும் கூறிய மகான் வள்ளலார். சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னரே பசிப்பிணியை போக்க அணையா அடுப்பை ஏற்றி வைத்தவர். அந்த அணையா அடுப்பு இதுநாள் வரையில் 3 வேளையும், வடலூர் வருபவர்களுக்கு பசியாற்றி வருகிறது. வள்ளலாரின் கோட்பாடுகளை உள்வாங்கிய பார்வதிபுரம் கிராம மக்கள் தங்களுக்கு சொந்தமான 106 ஏக்கர் நிலங்களை தானமாக வழங்கினர்கள்.

அதில் தற்பொழுது 60 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது. இதில்46 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்பு விவகாரம் அரசுக்கு தெரியாதா? இந்த ஆக்கிரமிப்பு இடங்களை பறிமுதல் செய்ய முடியவில்லை. எந்த ஒரு கோவிலாக இருந்தாலும் அக்கோவிலில் இருந்து 100 அடி தூரம் தள்ளிதான் கட்டிடம் கட்ட வேண்டும் என்ற வரையறை உள்ளது. ஆனால் வடலூர் வள்ளலார் தெய்வநிலையத்தில் ஞான சபையின் அருகே 20 அடி அருகில் அரசு கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டியுள்ளது. வள்ளலார் தெய்வ நிலையத்தை பார்த்திராத, தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் கோட்டையில் இருந்தவாறு அடிக்கல் நாட்டுவது அறமா? நேர்மையா?.

தமிழக அரசு முதலில் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். ஆக்கிரமிப்பு இடம் 46 ஏக்கரை பறிமுதல் செய்து அங்கு சர்வதேச மையம் அமைக்கலாம். வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் வருவது பிரச்சனை இல்லை. "இதனால் மகிழ்ச்சி அடைகிறோம்.

ஆனால் வள்ளலார் பெருவெளியில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றோம். இதையே பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி வருகிறார்.

இவ்வாறு டைரக்டர் கவுதமன் கூறினார்.

Tags:    

Similar News