கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி பலியான 6 பேரின் உடல் சொந்த ஊரில் அடக்கம்
- சார்லஸ், பிருதிவிராஜ், தாவிது மற்றும் பிளஸ்-2 மாணவரான ஹெர்மஸ், மீனவர்கள் பிரவின், ஈசாக் ஆகியோர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிழந்தனர்.
- சண்முகையா எம்.எல்.ஏ., ஊராட்சி தலைவர் சரவணகுமார், ஒன்றிய கவுன்சிலர் சேவியர் ஆகியோர் முயற்சியால் பலியான 6 பேரின் உடல்களும் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சிலுவைப்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது தம்பிகள் சார்லஸ் (வயது38), பிருதிவிராஜ் (36), தாவிது (30) உள்ளிட்ட 57 பேர் தஞ்சாவூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற திருகாட்டுப்பள்ளி பூண்டிமாதா பேராலயத்திற்கு சென்றனர்.
நேற்று முன்தினம் அவர்கள் பேராலயம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக சிலர் தண்ணீரில் மூழ்கினர்.
அப்போது அங்கிருந்தவர்கள் செல்வத்தை மீட்டனர். ஆனால் சார்லஸ், பிருதிவிராஜ், தாவிது மற்றும் பிளஸ்-2 மாணவரான ஹெர்மஸ், மீனவர்கள் பிரவின், ஈசாக் ஆகியோர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிழந்தனர்.
இதைத்தொடர்ந்து சண்முகையா எம்.எல்.ஏ., ஊராட்சி தலைவர் சரவணகுமார், ஒன்றிய கவுன்சிலர் சேவியர் ஆகியோர் முயற்சியால் பலியான 6 பேரின் உடல்களும் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது.
நேற்று மாலை பலியானவர்கள் உடலுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் தனது சொந்த நிதியில் இருந்து 6 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ. 1 லட்சம் நிதிஉதவி வழங்கினார்.
தொடர்ந்து பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் சொந்த ஊரில் உள்ள மயானத்தில் 6 பேரின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டது.
பள்ளி மாணவன் உள்ளிட்ட ஒரே பகுதியை சேர்ந்த 6 பேர் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவத்தால் சிலுவைபட்டி கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.