செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற ஒரே வாரத்தில் 6,713 பேர் விண்ணப்பம்
- சென்னையில் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- கடந்த 10 மாதத்தில் வெறும் 272 பேர் மட்டுமே உரிமம் பெற விண்ணப்பித்திருந்தனர்.
சென்னை:
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி பூங்காவில் கடந்த 5-ந்தேதி இரவு விளையாடிக்கொண்டிருந்த சிறுமி சுரக்ஷாவை 2 ராட்விலர் இன வளர்ப்பு நாய்கள் கடித்து குதறியது. இதில், சிறுமி பலத்த காயமடைந்து ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தலையில் படுகாயம் அடைந்த அந்த சிறுமிக்கு சமீபத்தில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, சூளைமேட்டில் நடைபயிற்சி சென்ற தம்பதியை நாய் கடித்து குதறியது.
சென்னையில் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த சம்பவங்கள் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது. எனவே, சென்னையில், நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவித்தது. உரிமம் பெறாத உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்தது.
மாநகராட்சியின் அறிவிப்பை தொடர்ந்து, செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறாத பலரும் ஆன்லைன் மூலம் உரிமம் பெற ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், கடந்த ஒரே வாரத்தில் சென்னையில் 6 ஆயிரத்து 713 பேர் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற விண்ணப்பித்துள்ளனர்.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி கால்நடைத்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:-
சென்னையில் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஒரே வாரத்தில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற 6 ஆயிரத்து 713 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், உரிய ஆவணங்களை சமர்பிக்காத 3 ஆயிரத்து 337 பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. 2 ஆயிரத்து 376 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது. கடந்த 5-ந்தேதியில் இருந்து இதுவரை ஆயிரம் பேருக்கு புதிதாக உரிமம் வழங்கியுள்ளோம். குறிப்பாக, கடந்த 3 நாட்களில் மட்டும் 2 ஆயிரத்து 300 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த 10 மாதத்தில் வெறும் 272 பேர் மட்டுமே உரிமம் பெற விண்ணப்பித்திருந்தனர். ஆனால், உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்ட பின்னர் ஏராளமானோர் உரிமம் பெற விண்ணப்பித்து வருகின்றனர். இந்த மாத இறுதிக்குள் 10 ஆயிரம் பேர் வரையில் புதிய உரிமம் பெற விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதத்திற்குள் 20 ஆயிரம் பேருக்கு புதிதாக உரிமம் வழங்குவதை இலக்காக நிர்ணயம் செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.