மாணவர் மீது தாக்குதல்: கைதான 7 கல்லூரி மாணவர்களுக்கு 30 நாட்கள் நல்லொழுக்க பயிற்சி- சைதாப்பேட்டை கோர்ட் உத்தரவு
- பிளாஸ்டிக் பைப்புகளுடன் வந்த நந்தனம் கல்லூரி மாணவர்கள் பிரேம்குமாரை சுற்றிவளைத்து தாக்கினர்.
- மாணவர்கள் 7 பேரையும் சைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
போரூர்:
சென்னை நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரேம் குமார். மாநிலக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை அவர் கல்லூரி செல்வதற்காக வடபழனி பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.
அப்போது அங்கு பிளாஸ்டிக் பைப்புகளுடன் வந்த நந்தனம் கல்லூரி மாணவர்கள் பிரேம்குமாரை சுற்றிவளைத்து தாக்கினர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் இளங்கனி மற்றும் போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு பிரேம்குமார் மீது தாக்குதல் நடத்திய கல்லூரி மாணவர்களான தீப கணேஷ், நவீன்குமார், தமிழ்செல்வன், அரசு, கிரிதரன், சதிஷ், அபிஷேக் ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது சட்ட விரோதமாக கூடுதல், ஆபாசமாக பேசுதல், மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ்வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாணவர்கள் 7 பேரையும் சைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி வேல்ராஜ் மாணவர்கள் 7 பேரையும் ஜாமீனில் விடுவித்தார். மேலும் அவர்களை 30 நாட்கள் நல்லொழுக்க பயிற்சி வகுப்பில் சேர்க்க உத்தரவிட்டார்.
அதன்படி கல்லூரி மாணவர்கள் 7 பேரும் இன்று முதல் 30 நாட்களுக்கு கல்லூரி முடிந்து மாலை 4 மணி முதல் 6 மணி வரை சைதாப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் நல்லொழுக்க பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள உள்ளனர்.
அங்கு சிறைத்துறை மற்றும் சமூக நலத்துறை சார்பில் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கி மீண்டும் இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடாமல் நல்வழிப்படுத்தும் வகையில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
மாணவர்களின் எதிர்கால நலன் கருதி அவர்களின் பெற்றோரை நேரில் வரவழைத்து பிள்ளைகளின் செயல்பாடுகளை கண்காணிக்க அறிவுறுத்துவதுடன் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்க வடபழனி போலீசார் முடிவு செய்து உள்ளனர்.