7 வயது சிறுவனுக்கு சாதி, மதம் அற்றவர் என சான்றிதழ்
- பெரியகுளம் அருகில் உள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்த ஒருவர் தனது மகனுக்கு சாதி, மதம் அற்றவன் என்ற சான்றிதழை பெற்று பள்ளியில் அளித்துள்ளார்.
- சுந்தரராஜபெருமாள் தனது மகனுக்கு சாதி, மதம் அற்றவன் என்ற சான்றிதழ் வழங்குமாறு பெரியகுளம் தாசில்தாரிடம் விண்ணப்பம் அளித்திருந்தார்.
பெரியகுளம்:
குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும்போதே சாதி, மதம் உள்ளிட்ட விபரங்கள் விண்ணப்பத்தில் பதிவிட வேண்டும் என அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. இதுமட்டுமின்றி படித்து முடித்து வேலைவாய்ப்பு மற்றும் அரசின் சலுகைகளை பெறுவதற்கும் இந்த தகுதி அவசியமாகிறது.
இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்த ஒருவர் தனது மகனுக்கு சாதி, மதம் அற்றவன் என்ற சான்றிதழை பெற்று பள்ளியில் அளித்துள்ளார். இப்பகுதியை சேர்ந்த சுந்தரராஜபெருமாள் தனது மகன் முகிலன்(7) என்பவனுக்கு சாதி, மதம் அற்றவன் என்ற சான்றிதழ் வழங்குமாறு பெரியகுளம் தாசில்தாரிடம் விண்ணப்பம் அளித்திருந்தார்.
ஏற்கனவே பலருக்கு இதுபோன்ற சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி தனது மகனுக்கும் அதுபோன்ற சான்றிதழ் வழங்கவேண்டும் என அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார். இதனை பரிசீலித்த தாசில்தார் காதர்செரிப், மாணவன் முகிலனுக்கு சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழை வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட சுந்தரராஜபெருமாள் அவன் படிக்கும் பள்ளியில் அளிக்க முடிவு செய்தார்.