தமிழ்நாடு

தெலுங்கர்கள் குறித்து சர்ச்சை பேச்சு - மன்னிப்பு கோரினார் நடிகை கஸ்தூரி

Published On 2024-11-05 11:38 GMT   |   Update On 2024-11-05 11:38 GMT
  • அந்தப்புரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் தான் தெலுங்கர்கள் என்று கஸ்தூரி பேசியது சர்ச்சையானது
  • என்னுடைய நண்பர்கள் என நான் நினைத்த பலரே எனக்கு எதிராக பேசுகின்றனர் என்று கஸ்தூரி ஆதங்கம்.

பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசும்போது "300 வருடங்களுக்கு முன் ராஜாவுக்கு அந்தப்புரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் எல்லாம், தெலுங்கு பேசுபவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் என... அப்படி சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு நீங்க யாருங்க தமிழர்கள். அதனால்தான் உங்களால் தமிழர்கள் முன்னேற்ற கழகம் என பெயர் வைக்க முடியவில்லை. திராவிடர் என்ற ஒரு சொல்லை கண்டுபிடித்து.." எனப் பேசினார்.

தெலுங்கு பேசுபவர்களை நடிகை கஸ்தூரி இழிவாக பேசியதாக சர்ச்சை வெடிக்க இதுகுறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்து அவர் விளக்கம் அளித்தார்.

அப்போது பேசிய அவர், தெலுங்கு மக்களை நான் இழிவாக பேசியதாக திமுக பொய் பிரசாரம் செய்து வருகிறது. தனது பேச்சை திரித்து பொய் பிரச்சாரம் செய்கின்றனர். தெலுங்கு இனம், தெலுங்கு மக்கள் என்ற சொல்லை நான் கூறவில்லை. தெலுங்கு மக்களை நான் மிகவும் மதிப்பவள். என் பிள்ளைகளும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியையும் படிக்கின்றனர்.

நான் தமிழச்சி என்றாலும், தெலுங்கு மொழியையும் மதிப்பவள். என்னுடைய நண்பர்கள் என நான் நினைத்த பலரே எனக்கு எதிராக பேசுகின்றனர்" என்று தெரிவித்தார்.

இந்நிலையில், தெலுங்கு மக்கள் குறித்து நான் கூறிய கருத்துக்காக வருத்தம் தெரிவிப்பதாக நடிகை கஸ்தூரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கையில், "இன்று எனது மிகவும் மரியாதைக்குரிய தெலுங்கு சகோதரர் ஒருவர், தமிழ்நாடு மற்றும் அதற்கு அப்பால் உள்ள ஒட்டுமொத்த தெலுங்கு மக்கள் மீதும் நான் கூறிய வார்த்தைகளின் தாக்கத்தை பொறுமையாக எனக்கு விளக்கினார்.

நான் என் பாரதத்தின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையில் மகத்தான பெருமை கொண்ட உண்மையான தேசியவாதி. நான் எப்போதும் சாதி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவள். தெலுங்கு மொழியோடு எனக்கு ஒரு சிறப்பு பந்தம் இருப்பது எனது அதிர்ஷ்டம்.

நாயக்கர் மன்னர்கள், கட்டபொம்மன் மற்றும் தியாகராஜகிருதிகள் பாடிய பெருமைமிக்க நாட்களை ரசித்து வளர்ந்தள் நான். தெலுங்கு மக்கள் எனக்கு பெயர், புகழ், அன்பு மற்றும் குடும்பத்தை கொடுத்துள்ளனர்.

நான் கூறிய கருத்துகள் குறிப்பிட்ட சில நபர்களை குறித்து பேசியதே தவிர, பெரும்பான்மையான தெலுங்கு சமூகத்தை பற்றி நான் பேசவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

எனது தெலுங்கு குடும்பத்தை புண்படுத்துவது எனது நோக்கமாக இருந்ததில்லை. நான் கூறிய கருத்துக்காக வருந்துகிறேன். அனைவரின் நலன் கருதி, 3 நவம்பர் 2024 அன்று ஆற்றிய உரையில் தெலுங்கு மக்கள் குறித்து நான் பேசிய அனைத்து கருத்துகளையும் திரும்ப பெறுகிறேன்.

அந்த உரையில் நான் எழுப்பிய சில மிக முக்கியமான விஷயங்களில் இருந்து திசை திருப்புவதற்கே இந்த சர்ச்சை எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கு சகோதரர்கள் தமிழ்நாட்டின் பிராமணர்களின் கண்ணியத்திற்கான போராட்டத்தில் அணி திரளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News