தீபாவளியை முன்னிட்டு சிவகாசியில் 95 சதவீத பட்டாசுகள் விற்பனை
- சிவகாசியில் தொடக்கத்தில் வந்த வாடிக்கையாளர்களுக்கு அனைத்து வகை பட்டாசுகளும் கிடைக்கும்.
- இறுதி வியாபார நாட்களில் வருபவர்களுக்கு கேட்கும் பட்டாசுகள் கிடைப்பது அரிதாக உள்ளது.
சிவகாசி:
பட்டாசு உற்பத்திக்கு பெயர் போன விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெரிய மற்றும் சிறிய அளவில் 1500-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்புகளை பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதும் 90 சதவீத பட்டாசு தேவைகளை சிவகாசி நகரம் பூர்த்தி செய்து வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பே பட்டாசு உற்பத்தி பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இரவு பகலாக ஊழியர்கள் பட்டாசுகளை உற்பத்தி செய்தனர்.
பண்டிகை நாட்கள் நெருங்க நெருங்க வெளியூர் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் சிவகாசிக்கு நேரடியாக வந்து பட்டாசுகளை ஆர்டர் செய்து வாங்கி சென்றனர். குறிப்பாக வட மாநிலத்தில் இருந்து அதிக அளவில் ஆர்டர்கள் குவிந்தன.
சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு பசுமை பட்டாசுகளை தயாரிக்க வேண்டும். பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி பட்டாசு வகைகள் உற்பத்தி செய்ய வேண்டும். சரவெடிக்கு தடை, பண்டிகை நாளில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் போன்ற பல்வேறு விதிமுறைகளை கோர்ட்டும், அரசும் விதித்துள்ளது.
இவ்வளவு இடர்பாடுகளையும் மீறி இந்த முறை சிவகாசியில் கடந்த சில வாரங்களாகவே பட்டாசு வியாபாரம் தீவிரமாக நடைபெற்றன. வெளி மார்க்கெட்டுகளில் விற்பதை விட சிவகாசியில் விலை குறைவாக இருக்கும். எனவே தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சிவகாசிக்கு வந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆலைகள் மற்றும் கடைகளுக்கு நேரடியாக சென்று பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனர். தீபாவளிக்கு முதல் நாள் வரை சிவகாசிக்கு வந்து பட்டாசு வாங்க வாடிக்கையாளர்கள் வருவது வழக்கம்.
சிவகாசியில் தொடக்கத்தில் வந்த வாடிக்கையாளர்களுக்கு அனைத்து வகை பட்டாசுகளும் கிடைக்கும். நாட்கள் செல்ல செல்ல பட்டாசுகள் விற்பனையாகி வருகின்றன. இதனால் இறுதி வியாபார நாட்களில் வருபவர்களுக்கு கேட்கும் பட்டாசுகள் கிடைப்பது அரிதாக உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் கிடைக்கும் பட்டாசுகளை வாங்கிக் கொண்டு திரும்புகின்றனர்.
சிவகாசியில் பட்டாசு விலை விபரம்:-
புஷ்வாணம் 1 பாக்ஸ்-ரூ.90, தரைசக்கரம்-ரூ.80, சீனிவெடி பாக்கெட்-ரூ.30, சாட்டை-ரூ.15, கம்பி மத்தாப்பு-ரூ.40, ராக்கெட் சிறியது-ரூ.40, 30 ஷாட் பெட்டி-ரூ.350.
மேற்கண்ட பட்டாசுகள் வெளி மார்க்கெட்டுகளில் பல மடங்கு விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சிவகாசியில் பட்டாசு வாங்க குவிகின்றனர்.
நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் இந்த முறை சிவகாசியில் பட்டாசு வியாபாரம் நன்றாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை 95 சதவீத பட்டாசுகள் விற்பனை ஆகியுள்ளது.
இன்னும் பண்டிகைக்கு 2 நாட்கள் இருப்பதால் முழுமையாக பட்டாசுகள் விற்பனையாகிவிடும் என வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.