மேட்டூர் அருகே நள்ளிரவில் மீன்வளத் துறைக்கு சொந்தமான விசைப்படகு தீ வைத்து எரிப்பு போலீசார் விசாரணை
- படகு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.
- விசைப்படகிற்கு தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் ஆண்டுக்கு 70 லட்சம் மீன் குஞ்சுகள் மீன்வளத்துறை சார்பில் விடப்பட்டு அணையில் வளர்க்கப்படுகிறது. மீன் குஞ்சுகள் பெரிதானவுடன் உரிமம் பெற்ற 2016 மீனவர்களை கொண்டு மீன்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அணையில் தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டு மீன் பிடிப்பதை தடுக்கவும், மீன்பிடி உரிமம் இல்லாத பரிசல்களை பறிமுதல் செய்தல், நாட்டு வெடிகுண்டு வீசி மீன் பிடிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க மீன்வளத் துறையினருக்கு ரோந்து செல்ல விசைப்படகு வழங்கப்பட்டது.
இந்நிலையில் கீரை காரனூர் காவிரி ஆற்றில் நிறுத்தி வைக்கப்பட்ட மீன்வளத்துறைக்கு சொந்தமான விசைப்படகு நள்ளிரவில் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் படகு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.
இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் மேச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நள்ளிரவில் விசைப்படகிற்கு தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.