தமிழ்நாடு

பூட்டிய கேட்டை தாண்டி மாடிக்கு சென்று உணவு தேடிய கரடி

Published On 2024-01-25 06:46 GMT   |   Update On 2024-01-25 06:46 GMT
  • கரடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கோத்தகிரி அடுத்த கெரடா குடியிருப்பு பகுதிக்கு வந்தது.
  • சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோத்தகிரி:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் கரடி, சிறுத்தை, காட்டுமாடு, யானை போன்ற வனவிலங்குகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே பெரும்பாலான விலங்குகள் உணவு, தண்ணீர் கிடைக்காமல் மலைஅடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் சுற்றி திரிந்து வருகின்றன. இதனால் அங்குள்ள பல்வேறு பகுதிகளில் மனிதன்-விலங்கு மோதல் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு ஒரு கரடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கோத்தகிரி அடுத்த கெரடா குடியிருப்பு பகுதிக்கு வந்தது. பின்னர் அங்கு பூட்டியிருந்த கேட்டை தாண்டி வீட்டுக்குள் புகுந்தது. தொடர்ந்து மாடிப்படிக்கட்டில் ஏறிய கரடி உணவு தேடி சுற்றி திரிந்தது. அங்கு சாப்பிடுவதற்கு எதுவும் கிடைக்காததால் அந்த கரடி மீண்டும் வந்த வழியாக திரும்பி காட்டுக்குள் சென்றுவிட்டது. இது அங்குள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

கெரடா குடியிருப்புக்குள் புகுந்த கரடி பூட்டிய வீட்டின் கேட்டை தாண்டி மாடிப்படிக்கு சென்று உணவு தேடிய சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே ஊருக்குள் நுழையும் கரடிகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த காட்டுப்பகுதியில் விடுவிக்க வேண்டுமென குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News