பட்டதாரி இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை: தந்தைக்கு உடல்நிலை பாதிப்பால் மனமுடைந்து விபரீதம்
- அறுவை சிகிச்சை என்பதால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற கவலையிலும் இருந்துள்ளார்.
- உமா மகேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கயத்தாறு:
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள கே.சிதம்பராபுரம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் ராமர். ஆடு வியாபாரி. இவருக்கு அரிய நாச்சியார் என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர. இவரது 2-வது மகள் உமா மகேஸ்வரி (24). இவர் எம்.சி.ஏ. படித்துள்ளார்.
இந்நிலையில் ராமருக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு உமா மகேஸ்வரி தந்தையுடன் தங்கி இருந்து அவரை கவனித்து வந்தார். இதையடுத்து நேற்று ராமருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனால் நேற்று முன்தினம் இரவு உமா மகேஸ்வரி வீட்டிற்கு சென்றுள்ளார். இதன் பின்னர் தனது தாயிடம் தந்தை ராமர் என்னை படிக்க வைப்பதற்காக கஷ்டப்பட்டு வேலை செய்ததால் அவருக்கு நோய் ஏற்பட்டுவிட்டது என்று கூறி புலம்பி வந்துள்ளார். மேலும் அறுவை சிகிச்சை என்பதால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற கவலையிலும் இருந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து நேற்று மாலை உமா மகேஸ்வரியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மகேஸ்வரியை தேடிய போது வீட்டின் பின்னால் உள்ள கிணற்றின் அருகே அவரது செருப்பு கடந்துள்ளது. இதில் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கிணற்றுக்குள் தேடிப்பார்த்தனர். அப்போது உமா மகேஸ்வரி, கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது குறித்து கடம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உமா மகேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை உடல் நலம் பாதிப்பால் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.