கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது: மாமல்லபுரம் பேரூராட்சி நகராட்சியாக மாறுகிறது
- பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற, பேரூராட்சி ஒப்புதல் தேவை.
- மாமல்லபுரம் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் பேரூராட்சி 15வார்டுகளை கொண்ட சிறப்பு நிலை பேரூராட்சியாக உள்ளது. இங்குள்ள மாமல்லபுரம், வெண்புருஷம், பூஞ்சேரி, தேவநேரி, பவழக்காரன் சத்திரம் பகுதிகளில் 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.
சர்வதேச சுற்றுலா பகுதியின் முக்கியத்துவம் கருதி தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மாமல்லபுரத்தை நகராட்சியாக மாற்ற முடிவெடுத்து உள்ளது. அதற்கான பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை செய்துவருகிறது.
இந்நிலையில் பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற, பேரூராட்சி ஒப்புதல் தேவை. இதற்கான அவசர கூட்டம் நேற்று மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ், துணைத் தலைவர் ராகவன், செயல் அலுவலர் கணேஷ், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் வழங்கினர். மாமல்லபுரம் பேரூராட்சி, நகராட்சியாக மாறுவதால் பொதுசுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, துப்புரவு, கழிவுநீர் அகற்றல், கழிப்பறை வசதி, குடிநீர் வழங்கல், கழிவுநீர் வெளியேற்றல், தெரு விளக்கு, சாலை வசதி, சாலை அமைத்தல், உள்ளிட்ட கூடுதல் வசதிகள் மாமல்லபுரம் பகுதி மக்களுக்கு கிடைக்கும் என நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் மாமல்லபுரம் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.