தாளவாடி மலைப்பகுதியில் அரசு பஸ்சை துரத்திய காட்டுயானையால் பரபரப்பு
- மலைப்பகுதியில் உள்ள தலமலையில் இருந்து தாளவாடி நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
- திடீரென வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒரு காட்டுயானை ஆக்ரோசத்துடன் பிளறியபடி அரசு பஸ்சை துரத்தியது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.
தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் யானைகள் உணவு, தண்ணீரை தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலை மற்றும் கிராமங்களில் உலா வருவது தொடர் கதையாகி வருகிறது.
சாலையில் சுற்றித்திரியும் யானை அந்த வழியாக வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி உணவு இருக்கிறதா என தேடியும் அலைகிறது. இதனால் வாகன ஓட்டிகள் வனப்பகுதியில் செல்லும் போது கவனத்துடன் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தலமலையில் இருந்து தாளவாடி நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
முதியனூர் மற்றும் நெய்தாலபுரம் கிராமங்களுக்கிடையே உள்ள வனப்பகுதி சாலையில் பஸ் சென்று கொண்டிருந்த போது திடீரென வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒரு காட்டுயானை ஆக்ரோசத்துடன் பிளறியபடி அரசு பஸ்சை துரத்தியது.
பஸ் டிரைவர் யானை துரத்தி வந்ததால் பஸ்சை பின்னோக்கி இயக்கினார். சிறிது தூரம் துரத்தி வந்த யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதனையடுத்து நிம்மதி பெறும் மூச்சு விட்ட அரசு பஸ் டிரைவர் பஸ்சை இயக்கினார்.