ஆர்டலி முறையை ஒழிக்க எடுத்த நடவடிக்கை என்ன? டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
- 19 ஆர்டலிகள் திரும்ப பெறப்பட்டுள்ளனர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- முதல்வரின் எச்சரிக்கை மட்டும் போதாது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி கருத்து
சென்னை:
தமிழகத்தில் பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லியாகப் பணியாற்றும் போலீசாரை உடனே திரும்ப பெற வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார். மேலும், ஆர்டலி தொடர்பாக ஏதாவது புகார் வந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நன்னடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.
அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்டலி முறையை ஒழிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்துவருவதாகவும், 19 ஆர்டலிகள் திரும்ப பெறப்பட்டுள்ளனர் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆர்டலி முறை ஒழிப்பு தொடர்பாக தமிழ்நாடு உள்துறை முதன்மை செயலாளர் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பிய நீதிபதி, இது தொடர்பாக ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி டிஜிபிக்கு உத்தரவு பிறப்பித்தார்.
ஆர்டலி விவகாரத்தில் முதல்வரின் எச்சரிக்கை மட்டும் போதாது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 75வது சுதந்திர தினம் கொண்டாடும் நிலையில் ஆங்கிலேயே ஆர்டலி முறையை பின்பற்றுவது வெட்கக்கேடானது. ஆர்டலி ஒழிப்பு முறையை பின்பற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட நேரிடும், என்றும் நீதிபதி எச்சரித்தார்.