கொடைக்கானலில் விதிமீறி கட்டப்பட்ட நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபிசிம்ஹா வீடுகள்- அளவீடு பணி தொடங்கியது
- அனுமதி பெறாமல் வீடு கட்டி வருவதாகவும், வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சிமெண்ட் சாலை அமைத்துள்ளதாகவும் புகார் எழுந்தது.
- தற்போது நடிகர்கள் கட்டி வரும் 2 கட்டிடங்கள் வரைபட அனுமதிக்கு மேல் கட்டியுள்ளது.
கொடைக்கானல்:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பேத்துப்பாறை பாரதி அண்ணாநகர் பகுதியில் நடிகர் பிரகாஷ்ராஜ் அரசு அனுமதி பெறாமல் வீடு கட்டி வருவதாகவும், வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சிமிண்ட் சாலை அமைத்துள்ளதாகவும் புகார் எழுந்தது.
மேலும் இதேபகுதியில் நடிகர் பாபிசிம்ஹா அரசு அனுமதியின்றி 3 மாடி கட்டிடம் கட்டி வருவதாக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். கொடைக்கானலில் ஜே.சி.பி உள்ளிட்ட கனரக வாகனங்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை வழங்கியது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர்.
இதனைதொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர், நிலஅளவையர் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் பாபிசிம்ஹா மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோரின் கட்டிடங்கள் மற்றும் இடங்களை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் வனத்துறையினரும் ஈடுபட்டனர். அளவீடு செய்யப்பட்ட அறிக்கையை திண்டுக்கல் கோட்டாட்சியர் ராஜாவிடம் வழங்க உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டிகுமார் பிரசாத் தெரிவிக்கையில், கொடைக்கானலில் 2400 சதுரடிக்குமேல் கட்டிடம் கட்ட அனுமதி கிடையாது. ஆனால் தற்போது நடிகர்கள் கட்டி வரும் 2 கட்டிடங்கள் வரைபட அனுமதிக்கு மேல் கட்டியுள்ளது.
இதுகுறித்து வில்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட உள்ளது. வனத்துறை இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளனர். நடிகர் பிரகாஷ்ராஜ் கட்டிடம் கட்ட அனுமதி பெறவில்லை. பாபிசிம்ஹா தனது தாயார் பெயரில் உள்ள இடத்தை புதுப்பித்து வீடு கட்டி வருகிறார். ஆனால் அதற்கும் அனுமதி பெற்றுள்ளாரா என தெரியவில்லை.
2 பேரிடமும் நோட்டீஸ் அளித்து விரைவில் விசாரணை நடத்தப்படும் என்றார்.