தமிழ்நாடு

பொதுமக்களுடன் செல்பி எடுத்து வாக்கு சேகரித்த நடிகை நமீதா- விசில் அடித்து இளைஞர்கள் ஆரவாரம்

Published On 2024-04-09 04:27 GMT   |   Update On 2024-04-09 04:27 GMT
  • சிறுவர்கள் நமீதாவை பார்த்து அக்கா எங்களுக்காக ஒரு பாட்டு பாடுங்கள் என கேட்டனர்.
  • வருகிற தேர்தலில் தாமரை சின்னத்துக்கு வாக்களித்து மத்திய மந்திரி எல்.முருகனை வெற்றி பெறச் செய்யுங்கள்.

மேட்டுப்பாளையம்:

நீலகிரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து அன்னூர் அருகே உள்ள பொகலூர் பகுதியில் நடிகையும், பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினருமான நமீதா பிரசாரத்தில் ஈடுபட்டார்.

நடிகை நமீதா வருவதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் பொகலூர் பகுதியில் திரண்டிருந்தனர். நமீதா திறந்த வேனில் நின்றபடி வந்ததை பார்த்ததும் பொதுமக்கள் உற்சாக மிகுதியில் சத்தம் போட்டு ஆரவாரம் செய்தனர். இளைஞர்கள் விசில் அடித்து வரவேற்றனர்.

அங்கு நின்ற சிறுவர்கள் நமீதாவை பார்த்து அக்கா எங்களுக்காக ஒரு பாட்டு பாடுங்கள் என கேட்டனர். மேலும் நமீதாவுடன் சிறுவர்களும், பெண்களும் செல்பி எடுக்க முயற்சித்தனர். அதற்கு சிரமம் வேண்டாம், நானே உங்களுடன் செல்பி எடுத்துக் கொள்கிறேன் என பிரசார வாகனத்தில் நின்றபடியே சுற்றி, சுற்றி செல்பி எடுத்துக் கொண்டார்.

பொதுமக்கள் மத்தியில் நடிகை நமீதா பேசியதாவது:-

மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த பா.ஜ.க. அரசு சிறப்பான ஆட்சியை கொடுத்துள்ளது. கூகுள் பே, பே.டி.எம் போன்ற டிஜிட்டல் பணபரி வர்த்தனை மூலம் வங்கிகளில் காத்திருக்கும் நிலையை எளிமையாக்கி பொது மக்களுக்கு கால நேர விரயத்தையும், சிரமங்களையும் குறைத்துள்ளது. செல்போன் பயன்பாட்டினை பொறுத்தவரை உலகத்தில் எங்கும் இல்லாத வகையில் செல்போன் டேட்டா உபயோகத்துக்கான கட்டணம் இந்தியாவில் மட்டுமே குறைந்த அளவில் உள்ளது.

வெளிநாட்டில் ஒரு ஜீ.பி டேட்டா ரூ.300ஆக உள்ள நிலையில் இந்தியாவில் ரூ.10 மட்டுமே. நீலகிரி தொகுதியில் தற்போது எம்.பி.யாக இருக்கும் நபரின் பெயரை கூட தனக்கு சொல்ல விருப்பமில்லை. நம்பி வாக்களித்த மக்களை அவர் தொடர்ந்து அவமானப்படுத்துகிறார். மக்களின் நம்பிக்கையான கடவுள் வழிபாட்டினை கொச்சைப்படுத்துகிறார். எனவே வருகிற தேர்தலில் தாமரை சின்னத்துக்கு வாக்களித்து மத்திய மந்திரி எல்.முருகனை வெற்றி பெறச் செய்யுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News