தமிழ்நாடு (Tamil Nadu)

தேர்தல் நேரம் என்பதால் பிரதமர் மோடி ஓட்டு கேட்க மட்டும் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்: நடிகை ரோகிணி

Published On 2024-04-02 07:19 GMT   |   Update On 2024-04-02 07:19 GMT
  • மக்களை பிரதமர் மோடி சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவில்லை.
  • தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பிரதமர் மோடி அணுகி வருகிறார்.

மதுரை:

மதுரையில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து நடிகை ரோகிணி மதுரையில் பல்வேறு பகுதிகளில் வாகன பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

மக்களின் குரல் உண்மையாகவே பாராளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டுமானால் நமது வேட்பாளரை வெற்றிபெற செய்ய வேண்டும். மக்களின் குரலை எதிரொலிக்க பாராளுமன்றத்தில் அக்கட்சியின் பலம் அதிகரிக்க வேண்டும். பா.ஜ.க. 400 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என பிரதமர் மோடி ஆசைப்படுகிறார். ஆனால் அதை முடிவு செய்ய வேண்டியது மக்கள்தான். யாரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள்.

ஜனநாயகத்தையும் மதச் சார்பின்மையையும் காக்க மக்கள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும். மழை, வெள்ளத்தால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டு தத்தளித்தபோது மத்திய அரசு நிவாரணமாக ஒரு பைசா கூட தரவில்லை. அப்போது வந்து மக்களை பிரதமர் மோடி சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவில்லை. ஆனால் இப்போது தேர்தல் நேரம் என்பதால் ஓட்டு கேட்க மட்டும் தமிழகத்துக்கு அடுத்தடுத்து ஓடோடி வருகிறார்.

தமிழக மக்கள் மிகவும் தெளிவாக உள்ளனர். எனவே இந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தகுந்த பாடம் புகட்டுவர். தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பிரதமர் மோடி அணுகி வருகிறார். தமிழகத்துக்கு எந்தவொரு நன்மையையும் செய்துவிடக் கூடாது என்ற திடமான முடிவோடு இருக்கிறார். தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க. பல்லாயிரக்கணக்கான கோடி பணத்தை திரட்டி ஊழல் செய்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியா அனைத்திலும் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News