தமிழ்நாடு (Tamil Nadu)

தமிழ்த்தாய் வாழ்த்து பாடினால் பெட்ரோல் இலவசம்.. நூதன போட்டியால் அலைமோதிய கூட்டம்

Published On 2024-10-20 15:07 GMT   |   Update On 2024-10-20 15:07 GMT
  • ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த நூதன போட்டி நடத்தப்பட்டது.
  • இந்த போட்டியில் வாகன ஓட்டிகள் ஆர்வமுடன் ஹெல்மெட் அணிந்து வந்து கலந்து கொண்டனர்.

சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில், தொலைக்காட்சி பொன் விழாவுடன் இந்தி மொழி மாதம் கொண்டாட்டத்தின் நிறைவு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். விழா தொடக்கத்தில் தேசிய கீதத்தை தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

அப்போது, "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரி விடுபட்டு பாடப்பட்டது.

'திராவிடம்' என்ற சொல்லை வேண்டும் என்றே கவர்னர் விழாவில் தவிர்த்து இருக்கிறார்கள் என்ற சர்ச்சை இதனால் எழுந்தது.

இந்நிலையில் தஞ்சாவூரில் தலைக்கவசம் அணிந்து வரும் வாகன ஓட்டிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பிழையின்றி முழுமையாக பாடினால், 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று ஜோதி தனியார் தொண்டு நிறுவனம் ஒரு நூதன போட்டியை அறிவித்தது.

ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த நூதன போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் மாணவ, மாணவிகள், இரு சக்கர வாகன ஓட்டிகள் ஆர்வமுடன் ஹெல்மெட் அணிந்து வந்து கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் 25 நபர்கள் சரியாக தமிழ்த்தாய் வாழ்த்தை சரியாக பாடி தலா 2 லிட்டர் பெட்ரோலை இலவசமாக பெற்று சென்றனர். 

Tags:    

Similar News