அ.தி.மு.க. கொடியை ஏற்றக்கூட எதிர்நீச்சல் போடும் நிலை உள்ளது- செல்லூர் ராஜூ
- மக்கள் விரோத ஆட்சியை வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களின் மகத்தான ஆதரவுடன் தூக்கி எறிந்து முற்றுப்புள்ளி வைப்போம்.
- வருகிற 30-ந்தேதி பசும்பொன் வரும் எடப்பாடியாருக்கு மகத்தான வரவேற்பு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வழங்க வேண்டும்.
மதுரை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வருகிற 30-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்கிறார். இதற்காக 29-ந்தேதி மாலை மதுரை வரும் எடப்பாடி பழனிசாமிக்கு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு வழங்கப்படுகிறது.
இது தொடர்பான ஆலோசனை கூட்டம் மதுரை மாநகர் மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் இன்று நடைபெற்றது. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியில், அ.தி.மு.க.வின் 53-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால் தி.மு.க.வி.ன் அதிகார துஷ்பிரயோகத்தால் அ.தி.மு.க. கொடியை கூட ஏற்றுவதற்கு எதிர்நீச்சல் போடும் நிலை உள்ளது.
இந்த மக்கள் விரோத ஆட்சியை வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களின் மகத்தான ஆதரவுடன் தூக்கி எறிந்து முற்றுப்புள்ளி வைப்போம். வருகிற 30-ந்தேதி பசும்பொன் வரும் எடப்பாடியாருக்கு மகத்தான வரவேற்பு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வழங்க வேண்டும். வருங்கால முதலமைச்சராகும் எடப்பாடியாருக்கு மதுரை நகரமே திரண்டு வந்து வரவேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.