தமிழ்நாடு (Tamil Nadu)

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேர்மறை அரசியலை கற்றுக்கொள்ளுங்கள்- உதயநிதிக்கு பா.ஜ.க. அறிவுரை

Published On 2024-10-20 08:04 GMT   |   Update On 2024-10-20 08:04 GMT
  • கவர்னர் பொறுப்பை கொச்சைப்படுத்தும் விதத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரும்ப பெற வேண்டும்.
  • இளைய தலைமுறை அரசியல் தலைவர்களுக்கு வழிகாட்டும் விதமாக மட்டுமே கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.

சென்னை:

தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நேர்மறை அரசியலை கற்றுத் தர வேண்டும்.

தமிழக இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கவர்னரை, கண்ணிய குறைவாக விமர்சித்ததற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரு மாநிலத்தின் முதல் மகனாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை வழி நடத்தக் கூடிய தலைமகனாக விளங்கக்கூடிய கவர்னர் பொறுப்பை கொச்சைப்படுத்தும் விதத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரும்ப பெற வேண்டும்.

தற்போது தமிழக அரசியலில் கட்சி பேதமின்றி மக்கள் நலத்தை பேணுவதில் கவனம் செலுத்தாமல், மக்களுக்கான உரிமைகளுக்கு குரல் கொடுக்காமல், மக்கள் நல்ல திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து விவாதிக்காமல், மோசமான தனிநபர் துதி பாடும் அரசியலும், வெறுப்பு அரசியலின் உச்சகட்டமாக, தனிப்பட்ட முறையில் தலைவர்களை, அவமானப்படுத்துவதும் கேலி பேசுவதும், குறிப்பாக பெண் தலைவர்களையும் விட்டு வைக்காமல் இகழ்வதும் அரசியல் அநாகரிகத்தின் உச்சகட்டமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அரசியலுக்கு வர விரும்பும் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய மூத்த தலைவர்களே, தங்களுடைய வாரிசுகளை தூண்டிவிட்டு அருவருப்பான அரசியல் விளம்பரத்திற்காக, தங்கள் கட்சியினர், வாரிசுகள், பேசும் அருவருக்கத்தக்க பேச்சுக்களை ரசித்து அழகு பார்ப்பது தமிழ் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு நல்லதல்ல.

தமிழகத்தில் வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தனி நபர் தாக்குதல்களை புறம் தள்ளி, மனிதநேயத்தோடு பரஸ்பரம் மக்களின் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இளைய தலைமுறை அரசியல் தலைவர்களுக்கு வழிகாட்டும் விதமாக மட்டுமே கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்று, தானே நேரடியாக களத்தில் இறங்கி மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தனிப்பட்ட முறையில் சென்று மக்களுக்கான பிரச்சனைகளை தீர்த்து, தமிழக இளைஞர்களுக்கும் தமிழக அரசுத் துறைஅதிகாரிகளுக்கும் முன்மாதிரியாக சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

அதேபோன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, உரிய முறையில் கட்சியிலும் ஆட்சியிலும் அரசியலிலும் சிறப்பாக செயல்பட நேர்மறை அரசியலை கற்றுக் கொடுத்து முன்மாதிரியான தலைவராக, தந்தையாக முதலமைச்சராக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News