உள்ளூர் செய்திகள்

திருவேற்காடு கோலடி ஏரியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்: பெண்கள் மறியல்

Published On 2024-10-20 07:35 GMT   |   Update On 2024-10-20 07:35 GMT
  • கோலடி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
  • பொதுமக்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தனர்.

பூந்தமல்லி:

திருவேற்காடு பகுதியில் கோலடி ஏரி உள்ளது. இங்கு பல்வேறு இடங்களில் ஏரியை ஆக்கிரமிப்பு செய்து ஏராளமான குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் கட்டிடங்களை அகற்ற பூந்தமல்லி வருவாய் துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

வருவாய்த்துறை அதிகாரி கள் நடத்திய ஆய்வில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பது தெரிந்தது. மேலும் 25-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் புதிதாக கட்டப்பட்டு வருவதும் தெரிந்தது.

இதைத்தொடர்ந்து நேற்று மாலை வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை ஜே.சி.பி.எந்திரத்துடன் இடித்து அகற்றினர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.

இந்த நிலையில் இன்று காலை 2-வது நாளாக அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோலடி ஏரியில் ஆக்கிரமிப்பில் இருந்த கட்டிடங்களை அதிரடியாக இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்ததும் பெண்கள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தனர். மேலும் கோலடி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதில் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசாரும், அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து கோலடி ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றும் பணி நடந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

Tags:    

Similar News