தமிழ்நாடு

சென்னை உயர்நீதிமன்றம் 

அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெறுமா?- இன்று காலை 9 மணிக்கு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Published On 2022-07-11 00:55 GMT   |   Update On 2022-07-11 01:02 GMT
  • வெளியூர்களில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் நேற்றே சென்னை வந்து விட்டனர்.
  • தீர்ப்புக்கு பின்னரே அடுத்தக் கட்ட முடிவை ஓ.பன்னீர்செல்வம் எடுக்க உள்ளதாக தகவல்

அ.தி.மு.க. பொதுக்குழு மீண்டும் இன்று கூடும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.15 மணிக்கு நடக்கிறது.

கடந்த முறை மண்டப அரங்கில் கூட்டம் நடந்தது. ஆனால், இந்த முறை மண்டபத்துக்கு முன்புறம் உள்ள காலியிடத்தில் பிரமாண்ட பந்தல் அமைத்து நடத்தப்படுகிறது. பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப் பட்டுள்ளது. மேடையிலேயே 100 பேர் அமரும் வகையில் இருக்கை போடப்பட்டுள்ளது. கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.

நேற்று வரை 2,455 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக வெளியூர்களில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் நேற்றே சென்னை வந்துவிட்டனர். அவர்கள் அனைவரும் கோயம்பேடு, மதுரவாயல் பகுதியில் உள்ள ஓட்டல்கள், திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது பொதுக்குழு நடைபெறும் பகுதிக்கு சென்றுள்ளனர்.  

இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் பொறுப்பை உருவாக்குவது குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்பட இருக்கிறது. அதன்படி, பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுடன், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட இருக்கிறார். அதேபோல், பொதுச்செயலாளரை தேர்தல் மூலம் தேர்வு செய்வதற்கான அறிவிப்பும் இந்த கூட்டத்திலேயே வெளியாக இருக்கிறது. 

ஒற்றை தலைமையை எதிர்க்கும் ஓ.பன்னீர்செல்வம், பொருளாளர் என்ற முறையில் இன்றைய கூட்டத்தில் பங்கேற்பாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனிடையே, அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை 9 மணிக்கு தீர்ப்பு அளிக்கிறது. இந்த தீர்ப்பை பொறுத்தே அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெறுமா? இல்லையா? என்பது தெரிய வரும். அதன்பின்னரே அடுத்தக்கட்ட முடிவை ஓ.பன்னீர்செல்வம் எடுப்பார் எனவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News