அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு போலி பாஸ் கொண்டு வந்த நபர்கள்
- பொதுக்குழு உறுப்பினர்கள் பொதுகுழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அடையாள அட்டை மற்றும் அழைப்பிதழுடன் வந்திருந்தனர்.
- பொதுக்குழு உறுப்பினர்கள் மண்டபத்தில் 4 வாயில்கள் மூலம் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படக்கூடாது என்பதற்காக பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். சிறப்பு அழைப்பாளர்களுக்கு இந்த முறை அனுமதி வழங்கப்படவில்லை.
பொதுக்குழு உறுப்பினர்கள் என்ற வகையில் போலி நபர்கள் புகுந்துவிடக்கூடாது என்பதற்காக பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. 2 நாட்களுக்கு முன்பே அவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும் அழைப்பிதழும் அவர்களுக்கு அனுப்பப்பட்டது.
பொதுக்குழு உறுப்பினர்கள் பொதுகுழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அடையாள அட்டை மற்றும் அழைப்பிதழுடன் வந்திருந்தனர். அழைப்பிதழ் மற்றும் அடையாள அட்டையை சரி பார்த்து உறுப்பினர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
பொதுக்குழு உறுப்பினர்கள் மண்டபத்தில் 4 வாயில்கள் மூலம் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அப்போது சிலர் 'போலி பாஸ்' கொண்டு வந்து பொதுக்குழு கூட்டத்துக்கு செல்ல முயன்றனர். இந்த போலி பாசை வாயிலில் நின்றபடி சரிபார்ப்பு பணியில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கண்டுபிடித்தனர்.
இது போலி பாஸ், அவர்களை உள்ளே விடக்கூடாது என்று போலீசாரிடம் அவர்கள் கூறினார்கள். இதையடுத்து போலி பாசுடன் வந்தவர்களை போலீசார் பொதுக்குழு கூட்டத்துக்குள் அனுமதிக்கவில்லை. அவர்களை திருப்பி அனுப்பினார்கள்.