கனமழை எதிரொலி: காஞ்சிபுரத்தில் நடைபெற இருந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு
- அக்டோபர் 17-ம் தேதி அ.தி.மு.க. 53-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
- காஞ்சிபுரத்தில் அக்டோபர் 17-ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
சென்னை:
மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் போற்றி வளர்க்கப்பட்ட, மாபெரும் மக்கள் பேரியக்கமான அ.தி.மு.க. அக்டோபர் 17-ம் தேதி 53-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இதை முன்னிட்டு, 17-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை பொதுக்கூட்டங்கள் கட்சி ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும் புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.
அதன்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், பிற மாநிலங்களிலும் ஆங்காங்கே எம்ஜிஆர், ஜெயலலிதா உருவச் சிலைகளுக்கும், படங்களுக்கும் மாலை அணிவித்து, ஏழை, எளியோருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.
அக்டோபர் 17-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று உரையாற்றுவார் என அ.தி.மு.க. தெரிவித்திருந்தது. பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியலையும் வெளியிட்டது.
இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மற்றும் வட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளதால் 17ம் தேதி நடைபெற இருந்த பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.