திருச்சி முகாமில் உள்ள இலங்கை அகதி பெண் முதல் வாக்குரிமை பெற்றார்: அனைவருக்கும் குடியுரிமை வழங்க வலியுறுத்தல்
- வெளிநாட்டு பிரஜை என்பதால் குடியுரிமை மற்றும் வாக்குரிமை மறுக்கப்பட்டு வருகிறது.
- நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின்னரே இந்த உரிமை அவருக்கு கிடைத்துள்ளது.
திருச்சி:
இலங்கை சிங்கள ராணுவத்திற்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட உச்சகட்ட போரின் காரணமாக லட்சக்கணக்கான இலங்கை தமிழர்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்தனர். அந்த வகையில் சொத்து உடைமைகளை விட்டு உயிரைக் காப்பாற்றுவதற்காக தமிழகத்திற்கு வந்த இலங்கை அகதிகள் ஆங்காங்கே சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு அவர்கள் தங்கி இருக்கிறார்கள். இவர்களுக்கு ரேஷன் பொருட்கள், தமிழக அரசின் மகளிர் உரிமை உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது.
ஆனால் வெளிநாட்டு பிரஜை என்பதால் குடியுரிமை மற்றும் வாக்குரிமை மறுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் தங்கியுள்ள நளினி கிருபாகரன் என்ற 38 வயது பெண்மணி நடை பெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை பெற்றுள்ளார்.
நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின்னரே இந்த உரிமை அவருக்கு கிடைத்துள்ளது. இவர் கடந்த 1986-ம் ஆண்டு ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் முகாமில் பிறந்தார். பின்னர் திருச்சி கொட்டப்பட்டு சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்டார். இந்த வாக்கு உரிமைக்கான அவரது பயணம் 2021 ல் தொடங்கியது. முதலில் இந்திய பாஸ் போர்ட்டுக்காக அவர் விண்ணப்பித்த போது பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நீதிமன்றத்தை நாடினார்.
2022 ஆகஸ்ட் 12ஆம் தேதி நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் தலைமையிலான சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச், நளினியின் மண்டபத்திலிருந்து பிறந்த சான்றிதழைக் காட்டி, அவருக்கு இந்திய பாஸ்போர்ட்டை வழங்கு மாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. 1950 ஜனவரி 26 மற்றும் ஜூலை 1, 1987 க்கு இடையில் இந்தியாவில் பிறந்த ஒருவர் குடியுரிமைச் சட்டம், 1995 ன் பிரிவு 3 சட்டத்தின் படி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
பின்னர் அந்த பாஸ்போர்ட்டைப் பாதுகாத்தார். பின்னர் ஒரு வழியாக சட்ட போராட்டம் நடத்தி இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாக்காளர் அடையாள அட்டையை நளினி பெற்றார்.
இது தொடர்பாக அவர் கூறும் போது, இந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க போகிறேன் நான் ஒரு இந்தியன் என்பதை உறுதிப்படுத்துகிறேன். இந்த வாய்ப்பை பெறுவதற்கு பல ஆண்டுகளாக கனவு கண்டேன். முகாமில் உள்ள அனைத்து அகதிகளும் இந்த உரிமைகளை அனுபவிக்க வேண்டும். மாநிலம் முழுவதும் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்கள் மற்றும் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமையை உறுதி செய்யும் கட்சிக்கு நான் வாக்களிப்பேன் மேலும் இந்தியாவில் பிறந்த எனது 2 குழந்தைகளுக்கு குடியுரிமையைப் பெறுவதற்கான சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். திருச்சி கொட்டப்பட்டு சிறப்பு முகாமில் வசிக்கும் இன்னொரு பெண்மணி கூறும் போது,
மகளிர் உரிமைத்தொகை உள்பட மாநில அரசின் திட்டங்களால் நாங்கள் பயனடைந்து வருகிறோம் என்றாலும் நான் இந்த பகுதியை சேர்ந்தவள் என கூறும்போது மகிழ்ச்சி கிடைக்கிறது. இந்த வாக்களிக்கும் உரிமை துன்புறுத்தப்பட்ட சமூகத்தின் உறுப்பினர்களுக்கு நீதியை வழங்குவதாக இருக்கும். அனைவருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றார். சென்னை கிறிஸ்டியன் கல்லூரியின் பேராசிரியர் ஆஷிக் போனோஃபர் கூறுகையில், மாநிலம் முழுவதும் இதேபோன்ற முகாம்களில் 58,457 அகதிகள் வாழ்கின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு புதிய அரசிற்கு அரசியல் விருப்பம் இருக்க வேண்டும் என்றார். நளினியின் வழக்கை உயர்நீதிமன்றத்தில் எதிர்த்துப் போராடிய வழக்கறிஞர் ரோமியோ ராய் கூறும்போது, நளினி போன்று முகாமில் உள்ள மற்ற அகதிகள் அனைவரும் விரலில் மை பூசுவதை உறுதி செய்யும் பணி தொடரும் என்றார்.