தமிழ்நாடு

அனைத்து ஏற்பாடுகளும் தயார்... விக்கிரவாண்டியில் நாளை வாக்குப்பதிவு...

Published On 2024-07-09 13:54 GMT   |   Update On 2024-07-09 13:54 GMT
  • விக்கிரவாண்டி தொகுதியில் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை 6 மணிக்கு பிரசாரம் முடிவடைந்தது.
  • துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ந் தேதி உடல்நலக் குறைவால் காலமானார்.

இதையடுத்து, இந்த தொகுதிக்கு நாளை (ஜூலை 10-ந் தேதி) இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உள்பட 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை 6 மணிக்கு பிரசாரம் முடிவடைந்தது. நாளை விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது.

விக்கிரவாண்டி தொகுதியில் 1,16,962 ஆண் வாக்காளர்களும், 1,20,010 பெண் வாக்காளர்களும், 29 இதர பாலினத்தவர் என மொத்தம் 2,37,011 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வாக்கு எண்ணிக்கை 13-ந் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலுக்காக 138 மையங்களில், 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பனையபுரம், குண்டலபுலியூர், ராதாபுரம் கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் மிக பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. மேலும் பதற்றமானதாக 42 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்புக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கு துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கு மண்டல ஐ.ஜி.நரேந்திர நாயர் மேற்பார்வையில் டி.ஐ.ஜி. திஷா மிட்டல் தலைமையில் 3 எஸ்.பி.க்களின் கண்காணிப்பில் 700 சிறப்பு போலீஸ் படையினர், 220 துணை ராணுவத்தினர் உள்பட 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை முதல், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, அந்தந்த வாக்குப்பதிவு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கான அடையாள மை உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

நேற்று முதல் நாளை வரை 3 நாட்களுக்கும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தினமான 13-ந் தேதியும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் மற்றும் விக்கிரவாண்டி தொகுதியையொட்டி உள்ள புதுவை மதுக்கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் விக்கிரவாண்டி தொகுதியில் வாக்குரிமை உள்ள வாக்காளர்கள் தமிழ் நாட்டில் எந்த பகுதியில் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றினாலும் அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் விக்கிரவாண்டி தொகுதிக்கு நாளை பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News