அக்.10ம் தேதிக்குள் அனைத்து கால்வாய்களும் தூர்வாரப்படும்- அமைச்சர் கே.என்.நேரு
- வடகிழக்கு பருவமழை குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார்.
- பருவமழை வருவதற்குள் கிடப்பில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க ஆணையிட்டுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நெருங்கி வருவதால், சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
ஏற்கனவே, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை வெள்ள மீட்புப்பணிகளில் ஈடுபடுத்தபடுவதற்கு 36 படகுகள் வாங்கப்பட்டுள்ளதாக சென்னை மேயர் பிரியா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
156 பேட்டரி ஸ்ப்ரேகள், 324 புகைப்பரப்பும் இயந்திரங்கள், வாகனங்களில் பொருத்தப்பட்ட 64 புகைப்பரப்பு இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றைய ஆலோசனை கூட்டத்தில், ஓட்டேரி, விருகம்பாக்கம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் கால்வாய் பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணி விரைந்து நடைபெற்று வருகிறது.
நெடுஞ்சாலைத்துறை, நீர்வளத்துறை, மின்சார துறை, நகர்ப்புற உள்ளாட்சி துறை பல்வேறு துறை அதிகாரிகளையும் வைத்து முதலமைச்சர் நேற்று ஆலோசனை நடத்தினார். பருவமழை வருவதற்குள் கிடப்பில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க ஆணையிட்டுள்ளார்.
1156 இடங்களில் 792 கிமீ தொலைவில் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளன. இன்னும் 6 நாட்களில் எல்லா பணிகளும் விரைவாக முடியும். 13 செ.மீ மழை பெய்த இடத்தில் கூட, எவ்வளவு நேரம் அங்கு மழைநீர் தேங்கியது என மணி நேரத்தை கணக்கில் வைத்து அங்கு என்ன செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை செய்துள்ளோம்.
கொசஸ்த்தலை ஆற்று வடிகால் பணிகள், 24.08.2024-க்குள் முடித்திருக்க வேண்டும். அது இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது வரை கொசஸ்தலை ஆற்றை நீர்வளத்துறையினர் தான் சீர் செய்து வருகிறார்கள். எங்கள் துறை பணி என்னவென்றால் மழைநீர் கால்வாய் குழாய்களை அதில் சேர்க்க வேண்டியது தான்.
நாங்கள் குழாய் இணைப்பு சரியாக வைத்துள்ளோம். அவர்கள் வேலை முடிந்தவுடன் இணைத்து விடுவோம். இரண்டு மூன்று மாதங்களில் நிரந்தரமாகவே அது முடிந்துவிடும்.
வானிலை ஆய்வு மையம் கூறும் சராசரி மழையின் அளவுக்கு நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். திடீரென்று ஒரே நாளில் 30 செ.மீ, 45 செ.மீ மழை பெய்தால் என்ன செய்வது.? இயற்கையை வெல்ல யாராலும் முடியாது. ஆனாலும் அதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.