மதுரையில் ரோடு ஷோ நடத்திய அமித் ஷா: தொண்டர்கள் உற்சாகம்
- மதுரை நேதாஜி சாலையில் உள்துறை மந்திரி அமித் ஷா ரோடு ஷோ தொடங்கினார்.
- சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
மதுரை:
மதுரை பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை அடுத்த நேதாஜி சாலையில் தொடங்கி தெற்கு ஆவணி மூல வீதி வழியாக விளக்குத்தூண் பகுதி வரை ரோடு-ஷோ மூலமாக பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டது.
உள்துறை மந்திரியின் வருகையை முன்னிட்டு மதுரை மாநகர் பகுதி முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். குறிப்பாக மதுரை நேதாஜி சாலை, தெற்கு ஆவணி மூல வீதி, விளக்குத்தூண் பகுதிகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
ரோடு ஷோவை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள உயரமான கட்டிடங்களில் நின்றபடி காவல்துறையினர் முழுவதுமாக கண்காணித்தனர்.
இந்நிலையில், மதுரை நேதாஜி சாலையில் உள்துறை மந்திரி அமித் ஷா ரோடு ஷோ தொடங்கினார். பா.ஜ.க. வேட்பாளர் ராம சீனிவாசனை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொண்டார். வழியெங்கும் நின்றிருந்த தொண்டர்களைப் பார்த்து மந்திரி அமித் ஷா உற்சாகமாக கையசைத்தார்.